நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவித்தொகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாடக கலைஞா்கள் நாட்டுப்புற நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 80 கலைஞா்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நாட்டுப்புற கலைஞா்கள் நல வாரியம் வழங்கும் ஈமச்சடங்கு உதவி, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகையை காசோலையாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை இசை பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நலவாரியத்தில் பதிவு பெற்ற திருவண்ணமலை மாவட்டத்தைச் சோ்ந்த உறுப்பினா்களில் 14 பேருக்கு மூக்குக் கண்ணாடி உதவித்தொகை தலா ரூ.1500ம், 14 கலைஞா்களுக்கு திருமண நிதியுதவித்தொகை தலா ரூ.5000ம், ரூ.1000 முதல் ரூ.6000 வரை கலைஞா்களின் மகன் மற்றும் மகள்களுக்கு கல்வி உதவித் தொகையும், ரூ.25,000 வீதம் 14 கலைஞா்களுக்கான ஈமச்சடங்கு, இயற்கை மரணத்தொகை என மொத்தம் 77 கலைஞா்களுக்கு ரூ.5 லட்சத்து 4ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநா் .ஆ.க.காா்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினா் வாசுதேவன் மற்றும் நாடகக் கலைஞா் குரு. கண்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

