சுடச்சுட

  

  வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் (47) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

  வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பின்புறம் ராமகிருஷ்ண மடத்துக்கு அருகே சாலையோரப் பள்ளத்தில் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது திங்கள்கிழமை பிற்பகல் தெரியவந்தது.

  அவரது தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலமான வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. எனவே, கொலை செய்ய வந்தவர்களிடம் அவர் கடுமையாகப் போராடியிருக்கலாம் என்றும், சுமார் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

  தகவலின்பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தினர்.

  திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தைச் சேர்ந்த சு.வெள்ளையப்பன், திருமணமாகாதவர். இந்து முன்னணியின் முழுநேர ஊழியராவார்.

  இந்து முன்னணியினர் மறியல்: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த இந்து முன்னணியினர், புதிய பஸ் நிலையம் அருகே திரண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, காட்பாடி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அண்ணா பாலம் வழியாக காட்பாடிக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே, வாகனங்கள் புதிய பஸ் நிலையத்துக்குள் திருப்பி விடப்பட்டன. அங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து, இந்து முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  5 பஸ்கள் மீது கற்கள் வீச்சு: இதனிடையே, வேலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் இருந்த 2 அரசு பஸ்களும், பஸ் நிலையத்துக்கு வந்த 3 அரசு பஸ்களும் கல்வீசித் தாக்கப்பட்டதில், அவற்றின் கண்ணாடிகள் நொறுங்கின.

  வெள்ளையப்பனின் சடலத்தை ஏற்றிச் செல்ல வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

  இதைத் தொடர்ந்து, காட்பாடி செல்லும் சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற இந்து முன்னனியினர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பஸ்கள், வாகனங்கள் எந்த வழியாகவும் செல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றன.  அதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இன்று பந்த்: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை பந்த் நடத்த இருப்பதாகவும், அதற்கான பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து வெள்ளையப்பனின் சடலம் வைக்கப்பட்டுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனைவரும் செல்லலாம் என்று இந்து முன்னனி நிர்வாகிகள் தெரிவித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பிறகு போக்குவரத்து சீரானது.

  மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை: சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கை. பலராமன், கோட்டாட்சியர் சண்முகசுந்தரம், வட்டாட்சியர் வின்சென்ட் ராஜசேகரன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

  மேலும், டி.எஸ்.பி.க்கள் தட்சிணாமூர்த்தி (வேலூர்), மதிவாணன் (காட்பாடி), லாவண்யா (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

  மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு: சு. வெள்ளையப்பன் சடலம் வைக்கப்பட்டுள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகரில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  குற்றவாளிகளைப் பிடிக்க

  4 தனிப்படை: வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  4 தனிப்படைகளும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை துவங்கியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai