சுடச்சுட

  

  மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை:ஆட்சியர் உத்தரவு

  By வேலூர்,  |   Published on : 02nd July 2013 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 676 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது தகுந்த நடவடிக்கையை விரைவாக எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார்.

  கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் ஒருவருக்கு ராணுவ மைய நல நிதியாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை, 5 பேருக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 8 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், இலங்கைத் தமிழர் மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களின் நல ஆணையரகத்தின் சார்பில் அரக்கோணம் பாணாவரம் இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் வழங்கினார்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கை. பலராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசீலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சார்லஸ் பிரபாகரன், முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  குடிநீர் கேட்டு வந்த

  வடச்சேரி கிராம மக்கள்

  குறைதீர்வு கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்த ஆம்பூர் அருகே வடச்சேரி கிராம மக்கள் ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.

  தங்களுக்கு கடந்த சிலமாதங்களாக 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதாகவும், அதனால் தாங்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

  பட்டா கோரிய

  முப்பதுவெட்டி கிராம மக்கள்

  ஆற்காடு அருகே முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், தாங்கள் கடந்த 46 ஆண்டுகளாக வசித்து வந்ததாகவும், சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடம் தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வந்தது.  எங்களுக்கு பூங்கோடு பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.  ஆனால் அந்த இடத்தில் வீடு கட்ட பட்டா வழங்கப்படவில்லை.  அதனால் அங்கு வீடு கட்ட முடியவில்லை.  ஆகவே, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.

  அதிக ஊதியம் கேட்கும்

  செருவங்கி கிராம மக்கள்

  குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட செருவங்கி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் குறைவான கூலி வழங்கப்படுவதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்து உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai