சுடச்சுட

    

    வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட 5 சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் வெடிக்க வைப்பு

    By வேலூர்,  |   Published on : 03rd July 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சக்தி வாய்ந்த 5 பைப் வெடிகுண்டுகள் ஏரிப் பகுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெடிக்க வைக்கப்பட்டன.

    வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வந்த போலீஸார் தடயங்களை சேகரித்தபோது அப்பகுதியில் கிடந்த, தோளில் மாட்டிச் செல்லும் பை ஒன்றைக் கண்டனர். அது வெள்ளையப்பன் எடுத்துச் சென்ற பையாக இருக்கலாம் என்பதால் அதை வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.

    காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும்போது, அந்தப் பையை இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் காண்பித்து கேட்டபோது, அது வெள்ளையப்பன் பயன்படுத்தும் பை அல்ல என்பதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து

    பையைத் திறந்தபோது 5 பிளாஸ்டிக் குழாய்களில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் இருந்ததை அடுத்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    உடனடியாக குண்டுகள் நிறைந்த பை பாதுகாப்பாக நேதாஜி விளையாட்டரங்கத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு மணல் மூட்டைகளுக்கு இடையே பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து ஏ.டி.ஜி.பி. சஞ்சய் அரோரா தலைமையில் செயல்படும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி. கமாண்டோ ஆசிர் விஜயகுமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தது.

    வெடிகுண்டுகள் இருந்த பையைப் பார்வையிட்ட குழுவினர், நேதாஜி விளையாட்டரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல என்பதைக் கருத்தில்கொண்டு, பாகாயம் அருகேயுள்ள ஓட்டேரியில் மிகவும் தாழ்வான பகுதிக்கு அதை எடுத்துச் சென்றனர்.

    முதலில் ஒரு குண்டை அவர்கள் வெடிக்கச் செய்தபோது சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு ஒலி கேட்டது. அதையடுத்து மீதமுள்ள 4 குண்டுகளையும் செயலிழக்கச் செய்து பின்னர் வெடிக்கச் செய்தனர். இதற்கு அவர்கள் சுமார் 3 மணி நேரம் செலவிட்டனர்.

    கருப்பு நிற சிலேரியில் தயாரிக்கப்பட்டது: வெடிகுண்டு கருப்பு நிற சிலேரி, அமோனியம் நைட்ரேட் மற்றும் வெடிஊக்கி ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பேட்டரி மூலம் இயங்க வைத்து வெடிக்கச் செய்யும் வகையில் தயாரித்துள்ளனர்.

    சுமார் முக்கால் அடி உயரமுள்ள இந்தக் குழாய் வெடிகுண்டுகள் மின்இணைப்பு கொடுத்த 7 நொடியில் வெடிக்கும் வகையில் டைம் டிலே வெடிபொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிக்கும்போது ஒரு சதுர அங்குலப் பகுதியை 700 டன் எடையால் தாக்கும் சக்தி வெளிப்படும்.

    ஏற்கெனவே சிறை அனுபவம் உள்ள குற்றவாளிகள் பலரும் ஒருவருக்கொருவர் கற்றுக் கொண்டு இத்தகைய குண்டுகளைத் தயாரிக்கின்றனர். எதிரியை இத்தகைய குண்டுகள் மூலம் தாக்க முற்படும்போது, பெரும்பாலும் தாக்குவோரும் இக்குண்டுகளால் பாதிக்கப்படுவது உண்டு.

    வெள்ளையப்பன் கொலை சம்பவத்தில், அவரை வெட்டும் முயற்சியில் எதிரிகள் வெற்றி பெற்றதை அடுத்து, எடுத்துச் செல்வதற்கு ஆபத்தான இக்குண்டுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai