சுடச்சுட

    

    12 கி.மீ. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட வெள்ளையப்பன் சடலம் வேலூர் நகரில் முழு கடையடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு

    By வேலூர்  |   Published on : 03rd July 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் சடலம், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து 12 கி.மீட்டர் ஊர்வலமாக செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

    இந்த ஊர்வலத்தையொட்டி நகரில் போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. நகரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை முழு கடையடைப்பும் நடத்தப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட வெள்ளையப்பனின் சடலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து காலை முதலே பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணியினர் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். நண்பகல் கடந்த நிலையில், பிரேதப் பரிசோதனை தாமதம் ஆனதை அடுத்து போலீஸாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணியளவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சடலம் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் காட்பாடி சாலையில் உள்ள திரெüபதியம்மன் கோயில் திடலை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

    திரளான இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பின்தொடர்ந்தனர்.

    இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. காட்பாடி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஊர்வலம் வரும் பாதைகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் நேஷனல் திரையரங்கம், மக்கான், வெங்கடேஸ்வரா பள்ளி சிக்னல், தொரப்பாடி, பாகாயம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இறுதி அஞ்சலி: பிற்பகல் 3 மணியளவில் திரெüபதி அம்மன் கோயில் திடலை ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு காத்திருந்த இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன், மாநில அமைப்பாளர் முருகானந்தம், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலர் மோகன்ராஜுலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து அப்பகுதியில் காத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    மாலை 4 மணியளவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சடலம் ஏற்றப்பட்டு வெள்ளையப்பனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டத்தைச் சேர்ந்த துரைசாமிபுரத்துக்கு புறப்பட்டது.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    திருவண்ணாமலை, திருக்கோயிலூர், திருச்சி, மதுரை வழியாக சடலத்தை எடுத்துச் செல்வதாகவும், ஆங்காங்கே இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடையடைப்பு: வெள்ளையப்பன் படுகொலையைக் கண்டித்து வேலூர் நகரம், காட்பாடி, தொரப்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

    இதுதவிர, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடையடைப்பு நடைபெற்றது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்துவதைக் கண்டித்து கோயில் பாதுகாப்புக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்தப்படும் என்று வெள்ளையப்பன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். துரதிருஷ்டவசமாக, கோயிலுக்காக நடத்த இருந்த கடையடைப்பு அவரது இறப்பை ஒட்டி நடத்தப்பட்டது.

    சாலை மறியல்: முன்னதாக, தோட்டப்பாளையம் பகுதியில் அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்த இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து 10 நிமிடத்தில் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பஸ் கண்ணாடிகள் உடைப்பு: இதனிடையே, இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்தவர்களில் சிலர், வேலூர் அண்ணா சாலை, பாகாயம், தொரப்பாடி ஆகிய பகுதிகள் வழியாகச் சென்ற 7 அரசு பஸ்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai