சுடச்சுட

  

  அரக்கோணம் அருகே ரயிலில் கோளாறு: நடுவழியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

  By dn  |   Published on : 04th July 2013 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் அருகே கோளாறு காரணமாக மின்சார ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது.

  இதையடுத்து அவ்வழியே சென்ற இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் 3 ரயில்களின் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாயினர்.

  சென்னை-திருத்தணி இடையேயான மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டுச் சென்றது.

  கைனூர் ரயில்வே கேட் அருகே சென்றபோது, அந்த ரயிலின் பின்பக்கத்தில் உயர் அழுத்த மின்சாரத்தைப் பெற உரசியபடி செல்லும் பேண்டோகிராப் திடீரென உடைந்து தொங்கியது. இதனால் ரயிலின் ஒரு பாதிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் வழியிலேயே ரயில் நின்றது.

  இதையடுத்து அவ்வழியே பின்னால் செல்ல இருந்த சென்னை-திருப்பதி கருடாத்ரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ஆகியன அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி செல்லவிருந்த மின்சார ரயில்கள் அரக்கோணத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றன.

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே உயர் அழுத்த மின்சாதன பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள், அதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. எனவே, அந்த ரயிலின் மற்றொரு பாதியில் இயங்கிய பேண்டோகிராப் மூலம் மெதுவாக திருத்தணி ரயில் நிலையத்துக்கு அந்த ரயிலை கொண்டு சென்றனர்.

  இதையடுத்து இரவு 8.20 மணி அளவில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டிருந்த காச்சிகுடா எக்ஸ்பிரஸ், கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 2.30 மணி நேர தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றன. இரவு 8.30 மணிக்கு மேல் அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் போக்குவரத்து சீரானது.

  இச்சம்பவத்தால், பாதிவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயிலில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கீழே இறங்க முடியாமலும் திருத்தணி செல்லமுடியாமலும் பெரும் அவதிக்குள்ளாயினர். தொடர்ந்து 3 மணி நேர தாமதத்துடன் அந்த ரயிலை அதிகாரிகள் திருத்தணி ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

  ரயில் புறப்பட தாமதம்- பயணிகள் மறியல்: வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை மாலை அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாசஞ்சர் ரயில் சித்தேரி ரயில் நிலையத்துக்கு 6.40 மணிக்கு வந்தது. ஆனால் 8 மணி வரை ரயில் புறப்படவில்லையாம்.

  இதனால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்தும், ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

  இதையடுத்து சித்தேரி ரயில் நிலைய அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் பெற்ற உத்தரவின்படி பெங்களுர்-சென்னை டபுள்டெக்கர் ரயில் சித்தேரியில் நிறுத்தப்பட்டு அந்த ரயிலில் வேலூர்-அரக்கோணம் பாசஞ்சர் ரயில் பயணிகள் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

  அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட கோளாறால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் நடைமேடை காலி இல்லாத நிலையில் வேலூர்-அரக்கோணம் பாசஞ்சர் சித்தேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai