சுடச்சுட

    

    வெள்ளையப்பன் கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை -  அர்ஜுன் சம்பத்

    By dn  |   Published on : 04th July 2013 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.

    வேலூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

    கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    ஹிந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது. தொண்டர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டுள்ளனர். எனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வேலூரில் பா.ஜ.க. நிர்வாகி டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரை சந்தித்து முறையீடு செய்ய இருக்கிறோம். இதற்கு முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும். நேரம் கிடைக்கவில்லையெனில் ஆளுநரை சந்திப்போம்.  

    தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் நடந்த பயங்கரவாத செயல்களில் தொடர்பிருக்கலாம். எனவே, வெள்ளையப்பன்

    கொலை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    வெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வந்தது. முன்மாதிரி நிர்வாகமாக செயல்பட்டு வந்தது.  இதை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தியது வருத்தமளிக்கிறது.

    இப்பிரச்னையை முன்னிறுத்தியும், கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டங்களைத் துவங்கியுள்ளோம். இந்தப் போராட்டம் தொடரும் என்றார் அர்ஜுன் சம்பத்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai