சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும்

    By வேலூர்,  |   Published on : 05th July 2013 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடத்த வேண்டுமென வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    மழைநீர் சேகரிப்பு குறித்து ஊராட்சி மன்றத்  தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    முகாமை  தொடங்கிவைத்து ஆட்சியர் பேசியது: நீரின்றி யாரும் உயிர் வாழ முடியாது. நம்முடைய உடலில் 60 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் 90 சதவீதம் நீர் உள்ளது. நாம் உண்ணும் உணவில் 15 சதவீதம் நீர் உள்ளது. உடல் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் அவசியம்.

    வேலூர் மாவட்டத்தில் நீர் சேமிப்பு குறைவாக உள்ளது. போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லை.  அதற்கு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதே காரணம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 15 ஒன்றியங்கள் 100 சதவீத தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன.  நெமிலி, திமிரி ஆகிய ஒன்றியங்கள் 90 சதவீத தண்ணீரையும், வாலாஜா ஒன்றியம் 80 சதவீத தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன.

    2005, 2007, 2010 ஆகிய ஆண்டுகளைத் தவிர கடந்த 10 ஆண்டுகளில் மழை குறைந்து விட்டது. ஆகவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குளம், குட்டைகள், பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவை குப்பை கொட்டுமிடங்களாக மாறி வருகின்றன. மேலும் நகரத்தை போல கிராமங்களிலும் சாலைகள் சிமென்ட் சாலைகளாக மாறி வருகின்றன.  அதனால் நிலத்தில் தண்ணீர் தேங்குவதேயில்லை. 

    மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. அதனைப் பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீரை சேகரிக்க செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

    முகாமில் நிர்வாகப் பொறியாளர் நாராயணசாமி, துணை நிலநீர் வல்லுநர் ஜனகராஜ், உதவி நிலநீர் வல்லுநர் எஸ்.ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) சரவணன், உதவிப் பொறியாளர்கள் உதயகுமார், தனசேகர், மோகன், சேகர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai