Enable Javscript for better performance
தருமபுரி சென்ற பூவை ஜெகன்மூர்த்தி கைது - Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி சென்ற புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்பட 32 பேரை போலீஸார் வேலூர் அருகே உள்ள பள்ளிகொண்டாவில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    தருமபுரி பெண் திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தருமபுரி அருகே வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி சென்னையிலிருந்து கார் மூலம் தருமபுரிக்குச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் வந்த 10 வாகனங்கள் காஞ்சிபுரம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களை மட்டும் செல்ல அனுமதிக்குமாறு கேட்டு அங்கிருந்து 5 வாகனங்களில் வேலூர் வந்துள்ளனர்.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீஸ் குழு பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் காலை 10.30 மணியிலிருந்து காத்திருந்தனர். காலை 11.15 மணிக்கு பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வந்த 5 வாகனங்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

    தங்களை தருமபுரி செல்ல அனுமதிக்குமாறு எஸ்.பி. விஜயகுமாருடன் ஜெகன்மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    "தருமபுரி செல்ல அனுமதிக்க முடியாது. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என எஸ்.பி. விஜயகுமார் கேட்டுக் கொண்டார். பிறகு ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட 32 பேரை போலீஸார் கைது செய்து பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு பிற்பகல் 1.30 மணிக்கு விடுவித்தனர். பின்னர் அவர்கள் சென்னைக்குத் திரும்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக வேலூர்-ஆம்பூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காவேரிபாக்கத்தில் 8 பேர் தடுத்து நிறுத்தம்: புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மேலும் 8 பேர் சென்னையிலிருந்து கார் மூலம் தருமபுரிக்கு செல்லவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவேரிபாக்கம் பகுதியில் போலீஸார் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai