Enable Javscript for better performance
லாரி-பைக் மோதல்: கண்டக்டர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த  அரசு பஸ் கண்டக்டர் செல்வராஜ் (52), விபத்தில் இறந்தார்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர் சேகருடன் திருப்பத்தூரை நோக்கி பைக்கில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், பலத்த காயமடைந்த செல்வராஜ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். இதில், சேகர் காயம் அடைந்தார்.

    இறந்த செல்வராஜுக்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    விபத்தில் ஆட்டோ டிரைவர் சாவு

    வேலூர், ஜூலை 8: வேலூரை அடுத்த பெருமுகை ரோட்டரி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் (36), விபத்தில் இறந்தார்.

    இவர் தனது ஆட்டோவில் அலமேலுமங்காபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார்.

    சாராய விற்பனை: ஒருவர் கைது

    வாணியம்பாடி, ஜூலை 8: ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் ஊராட்சிக்குள்பட்ட சிலிப்பி வட்டத்தைச் சேர்ந்தவர் குழந்தை மகன் மகி (45), சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டார்.

    திங்கள்கிழமை மூக்கனூர் ஏரிக்கரையில் அருகே சாராயம் விற்பனை செய்தபோது, இவரை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்தார்.

    பைக்-வேன் மோதல்: வியாபாரி காயம்

    திருப்பத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த வியாபாரி சீனிவாசன் (42), விபத்தில் காயம் அடைந்தார்.

    இவர் திங்கள்கிழமை தனது பைக்கில் ஜோலார்பேட்டையை நோக்கி சென்றுள்ளார். அப்போது பக்கிரிதக்கா அருகே பைக் மீது பின்னால் வந்த வேன் மோதியது.

    இதில், காயம் அடைந்த சீனிவாசன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டைச் சேர்ந்த வேன் டிரைவர் கருணாநிதியை (33) போலீஸார் கைது செய்தனர்.

    அண்ணியின் ஏ.டி.எம். கார்டில் பணம் திருட்டு

    குடியாத்தம், ஜூலை 8: பேர்ணாம்பட்டை அடுத்த செர்லபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பு (40). இவரது ஏடிஎம் கார்டை மைத்துனர் நாராயணன் திருடிச் சென்று, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.37,363-ஐ எடுத்துக் கொண்டாராம். பணத்தை திருப்பித் தருமாறு குப்பு கேட்டதற்கு, நாராயணன் மறுத்தாராம்.

    புகாரின்பேரில் பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    அடுத்தவரின் வீட்டுமனை விற்பனை:

    இளைஞர் மீது வழக்கு

    பேர்ணாம்பட்டு முகமதுஅலி தெருவைச் சேர்ந்தவர் பூட்டு, குடை ரிப்பேர் செய்யும் தொழிலாளி அஸ்கர் (25). இவர் தரைக்காடைச் சேர்ந்த அப்துல்லாவிடம்(34) ரூ.1.70 லட்சத்துக்கு ஒரு வீட்டுமனையை பேசி, ரூ. 70 ஆயிரம் முன் பணம் செலுத்தினாராம்.

    பின்னர் விசாரணை செய்ததில் அது வேறொருவருக்குச் சொந்தமான வீட்டுமனை என தெரிந்ததாம். புகாரின்பேரில் பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    2-வது திருமணம்: தொழிலாளி கைது

    பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கோவிந்தன் (40). இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கோவிந்தன், அதே பகுதியைச் சேர்ந்த ஷீலாவை (30) 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.

    இதுகுறித்து கவிதா அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, பேர்ணாம்பட்டு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. விஜயகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவிந்தன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

    சாம்பார் கொட்டி குழந்தை சாவு

    வாலாஜாபேட்டை,ஜூலை 8: வாலாஜா அருகேயுள்ள எடபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி தாமோதரன் மகள் அனுப்பிரியா (2). கடந்த 22ஆம் தேதி தாமோதரனின் மனைவி சமையல் செய்து விட்டு அடுப்பிலிருந்த சாம்பாரை கீழே இறக்கி வைத்துவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றாராம்.

    அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அனுப்பிரியாவின் கால் பட்டதில் சாம்பார் பாத்திரம் சாய்ந்ததாம். இதில், கொதிக்கும் சாம்பார் பட்டதில் குழந்தையின் உடல் வெந்தது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுப்பிரியா, அங்கு திங்கள்கிழமை இறந்தார்.

    லாரி, கார் பறிமுதல்

    காவேரிப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் புதூர் கிராமத்தில் கேட்பாரற்றுக் கிடந்த லாரி, கார், அவற்றிலிருந்து 12 மாங்காய் மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அங்கு சென்று, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

    அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

    ராணிப்பேட்டை, ஜூலை 8: ஆற்காடு அரசுப் பணிமனைக்குச் சொந்தமான பஸ் ராணிப்பேட்டையிலிருந்து சிப்காட், திருவலம் வழியாக வேலூர் வரை சென்றுவருகிறது. ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை மாலை பஸ் சென்றபோது, குடி போதையில் வந்த 4 பேர் கற்களை வீசினராம்.

    இதுகுறித்து பஸ் ஓட்டுநர் மகேந்திரன், நடத்துநர் கந்தன் ஆகியோர் அளித்த தகவலின்பேரில், சிப்காட் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இளம்பெண் தற்கொலை

    ராணிப்பேட்டை, ஜூலை 8: ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி லதா (20), தற்கொலை செய்துகொண்டார்.

    சதீஷ்குமாருக்கு கடனும், மது அருந்தும் பழக்கமும் இருந்ததாம். இதனால் மனமுடைந்த லதா ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.

    தகவலின்பேரில் ஆற்காடு நகர போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, லதாவின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமரசம் செய்தததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai