சுடச்சுட

    

    வெள்ளையப்பன் கொலை: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

    By  வேலூர்  |   Published on : 11th July 2013 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் கொலை வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், மாவட்ட காவல் துறையும் எடுக்க வேண்டும் என்று அதன் மாநில அமைப்பாளர் முருகானந்தம் கேட்டுக் கொண்டார்.
     வேலூரில் இயக்கத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது:
     வேலூரில் சு.வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில், கொலையாளிகள் யார் என்பதை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை.
     சமுதாயப் பணியில் முழுநேரம் ஈடுபட்டு வந்த வெள்ளையப்பனுக்கு தனிப்பட்ட முறையில் எதிர்ப்போ, விரோதமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. அவரை ஒரு பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
     வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பிறகு, வெள்ளையப்பன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
     இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்க நாடாரின் சமாதியில் இருந்த சிவலிங்கத்தை புதன்கிழமை யாரோ உடைத்து எடுத்துச் சென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்று இந்து முன்னணி இயக்கத்துக்கு எதிராக ஒரு பயங்கரவாத கும்பல் செயல்படுவதை தமிழக அரசு உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     21-ல் ஆர்ப்பாட்டம்: கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில், நகராட்சி அளவில் இம்மாதம் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். வேலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் தலைமை தாங்கவுள்ளார்.
     வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ர.பாரிவள்ளல், கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி இயக்கத்தினரை தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முருகானந்தம்.
     இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.மகேஷ், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட மாநகர பொதுச் செயலர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai