Enable Javscript for better performance
கஞ்சா கடத்தல்: 2 இளைஞர்கள் கைது - Dinamani

சுடச்சுட

  

  காட்பாடியை அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் புதன்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சித்தூரிலிருந்து வேலூரை நோக்கி பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது அவர்கள் வேலூர் சலவன்பேட்டை தினேஷ் (22), ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்த கிரண்குமார் (22) என்பதும், இருவரிடம் ஒரு கிலோ கஞ்சா மற்றும் மதுபாட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

  முதியவர் கொலை: இளைஞர் கைது

  வேலூர் அருகேயுள்ள மேட்டுஇடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (75). இவர் புதன்கிழமை தனது மகன் சரவணனின் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் முன் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (28), தகராறு செய்தாராம்.

  இதை தட்டிக் கேட்ட சரவணன், அவரது சகோதரர் சீனிவாசன் ஆகியோரை ஆறுமுகம் தாக்கினாராம். அப்போது சமரசம் செய்ய முயன்ற சின்னசாமி தாக்கப்பட்டாராம்.

  பலத்த காயமடைந்த சின்னசாமி தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.

  இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

  சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்

  வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் செல்போன் மற்றும் 25 கிராம் கஞ்சா பொட்டலம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

  இச்சிறை வளாகத்தில் உள்ள புதிய கட்டடப் பகுதி அருகே சிறைக் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவை கண்டெடுக்கப்பட்டன.

  இதுகுறித்து பாகாயம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  3 கார்கள் பறிமுதல்; ஒருவர் கைது

  வாணியம்பாடி, ஜூலை 11: வாணியம்பாடி காதர்பேட்டையைச் சேர்ந்த பசுலூர்ரகுமான் மகன் சும்சுதீன் (55) . இவர் கார்களை திருடி வந்தாராம்.

  இந்நிலையில், இவர் செவ்வாய்க்கிழமை இரவு நியுடவுனைச் சேர்ந்த கைசுதீனின் காரை திருடிக் கொண்டு வந்தபோது, வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. இதனால், அவர் அங்கேயே நின்றுள்ளார்.

  வழியில் வந்த வாகனத்தை லிப்ட் கேட்டபோது, அதில் போலீஸார் வந்ததைக் கண்டார். சந்தேகப்படும்படியாக இருந்த சம்சுதீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல இடங்களில் கார் திருடியது தெரியவந்தது.

  இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதுதொடர்பாக டிஎஸ்பி மாணிக்கம், காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், தனிப்படை உதவி காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர், சேகர், தலைமை காவலர் கார்த்திக் ஆகியோர் வழக்குப் பதிந்துள்ளனர்.

  லாட்டரி சீட்டு விற்பனை: 4 பேர் கைது

  குடியாத்தம், ஜூலை 11: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக குடியாத்தம் நகரில் 4 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

  பாவோடும்தோப்பைச் சேர்ந்த மணிவண்ணன் (34), நெல்லூர்பேட்டை வடக்கு மாட வீதியைச் சேர்ந்த சிவகுமார் (53), காங்கிரஸ் அவுஸ் ரோடைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (44), புவனேஸ்வரிபேட்டையைச் சேர்ந்த குமரன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் என நகர போலீஸார் தெரிவித்தனர்.

  சங்கிலி பறிப்பு: 2 பேர் கைது

  ஆந்திர மாநிலம் பலமநேரியைச் சேர்ந்தவர் கேபிள் டி.வி. தொழில் செய்யும் ரமேஷ் (28). இவரது மனைவி குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியைச் சேர்ந்த நந்தகுமாரி. இருவரும் பலமநேரியிலிருந்து புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் கல்லப்பாடிக்கு வந்தனர்.

  சைனகுண்டா அடுத்த ஆம்பூரான்பட்டி அருகே வரும்போது எதிரே பைக்கில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்து தாக்கிவிட்டு, ரமேஷின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்களாம்.

  புகாரின்பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, சேங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஷ் (26), சீவூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (24) ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

  முதியவர் சடலம் கண்டெடுப்பு

  ராணிப்பேட்டை, ஜூலை 11: ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி பாலாற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

  தகவலின்பேரில் நகர காவல் ஆய்வாளர் காமராஜ் அங்கு சென்று, சடலத்தை பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai