சுடச்சுட

  

  எந்த அரசும் கல்விக்கு இலவசம் தருவதில் தவறில்லை. சமுதாயத்தை திருத்தும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு என்று அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு கூறினார்.

  வேலூர் கல்வி மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,141 மதிப்பெண்கள் பெற்ற பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் சரத்குமாரின் மேல்படிப்புக்காக, தனது தனிப்பட்ட உதவியாக கலையரசு ரூ.25 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  மாணவருக்கு நிதியுதவியை அளித்து கலையரசு பேசியதாவது:

  எனது தொகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர், அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றது எனக்கு பெருமை அளிக்கும் விஷயம். மாணவர் பெற்றுள்ள வெற்றிக்கு பின்னால் அவரது கடுமையான உழைப்பு, விடா முயற்சி உள்ளது.

  சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவதற்கு உழைப்பை செலுத்தும் பள்ளி ஆசிரியர்களை பாராட்டுவதற்கே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

  கல்விக் கண் திறந்த காமராஜர் கிராமங்கள்தோறும் பள்ளிகளை திறந்தார். ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதை இன்னும் விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்ததன் காரணமாக ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிப் படிப்பை நாடத் தொடங்கினர்.

  இன்றைய முதல்வர் சத்துணவு திட்டத்தில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

  கல்விக்கு செய்கின்ற செலவு எக்காலத்திலும் வீணாகாது. நம்மை விட்டு பணம், பொருள் போனாலும், கற்ற கல்வி நம்மோடு இருந்து வாழ வழிவகுக்கும்.

  அதனால்தான் சமுதாயத்தின் அடிதட்டு மக்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் தொடர்ந்து போராடி வருகிறார்.

  சமுதாயத்தை திருத்தும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அத்தகைய கல்விக்கு எந்த அரசும் இலவசம் தருவதில் எவ்வித தவறும் இல்லை என்றார் கலையரசு.

  நிகழ்ச்சிக்கு பென்னாத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai