சுடச்சுட

    

    மக்கள் தொகை பெருக்கத்தை பெண் கல்வி கட்டுப்படுத்தும்

    By வேலூர்  |   Published on : 13th July 2013 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கல்லூரிப் படிப்பு வரை பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்படும் என்பதை உணர்ந்து பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

    வேலூர் ஊரிசு கல்லூரி வளாகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த அமைச்சர் பேசியது:

    மக்கள் தொகை பெருகுவதால் ஏற்படும் அபாயத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக 1987-ம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் இந்த நாளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    மக்கள் தொகை அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஆபத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.

    முதல்வர் ஜெயலலிதா கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி அவற்றுக்காக நிதி நிலை அறிக்கைகளில் அதிக நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறார். பெண்கள் கல்வியில் மேம்பட வேண்டும்.

    அதன் மூலம் அவர்கள் சமுதாய விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2004-ம் ஆண்டில் இலவச மிதிவண்டி வழங்கத் தொடங்கினார்.

    பெண்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வை அவர்கள் பெறுவார்கள் என்ற நோக்கமும் அதில் இருந்தது. அதனால்தான் தாலிக்குத் தங்கம், பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம், உயர் கல்வி முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் போன்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

    கல்வியில் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கல்வி மூலம் விழிப்புணர்வு பெறும் இளைய தலைமுறை நாளை எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றலைப் பெற முடியும் என்றார் வீரமணி.

    கருத்தரங்கில் ஆட்சியர் பொ.சங்கர் பேசியது:

    பெண்களுக்கான கல்வியில் தமிழக முதல்வர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். திருமண உதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டங்களை தொலைநோக்குடன் செயல்படுத்தி வருகிறார். உயர் கல்வியை ஒரு பெண் முடிக்கும்போது 21 வயதை அடைகிறார். அப்போதுதான் அவர் திருமண வயதை எட்டுகிறார்.

    கிராமப்புற பெண்கள் படிப்பு, திருமணமாகி ஒரு வீட்டில் வாழும் பக்குவம், அரசு அளிக்கும் திருமண நிதியுதவி ஆகியவற்றை முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டத்தின் காரணமாகப் பெறுகின்றனர் என்றார் ஆட்சியர்.

    மேயர் பி.கார்த்தியாயினி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் வி.எஸ்.விஜய், அ. முகமது ஜான், கே.ஜி.ரமேஷ், சு.ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் லீலா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் புறப்பட்டு ஊரிசு கல்லூரியைச் சென்றடைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai