சுடச்சுட

  

  விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

  By வேலூர்,  |   Published on : 14th July 2013 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் அருகே விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் இதயம், சிறுநீரகம் தானமாக அளிக்கப்பட்டன. இவை சென்னையில் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளிகளுக்கு சனிக்கிழமை பொருத்தப்பட்டன.

  திருவலம் அருகேயுள்ள சோழவரத்தை அடுத்த துத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி. இவருக்கு மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் விஷ்ணுகுமார் (26), பால் வியாபாரம் செய்துவருகிறார். இவர் காட்பாடியில் உள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக, பைக்கில் சேர்க்காடு வழியாக வியாழக்கிழமை சென்றுள்ளார்.

  அப்போது கசம் அருகே பைக் நிலைதடுமாறி, சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஷ்ணுகுமார் மூளைச்சாவு அடைந்துள்ளதாகத்  தெரிவித்தனர்.

  இதையடுத்து, விஷ்ணுகுமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை 8 டாக்டர்கள் அடங்கிய குழு இளைஞரின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை அகற்றியது.

  இவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கே.எம்.சி., மியாட் மருத்துவமனைக்கு காலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

  சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மும்பையைச் சேர்ந்த  நோயாளி ஒருவருக்கு இதயம் பொருத்தப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

  இளைஞரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட இவை 6 மணி நேரத்துக்குள் நோயாளிகளுக்கு பொருத்தப்பட வேண்டும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் இரு மருத்துவமனைகளுக்கும் உரிய நேரத்தில் எடுத்துச் சென்று ஒப்படைக்கப்பட்டன என்று சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

  வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இவ்வாகனத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபடாமல் ஒன்றரை மணி நேரத்தில் சென்னை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai