Enable Javscript for better performance
6 குடிசைகள் எரிந்து சாம்பல் - Dinamani

சுடச்சுட

  

  வேலூர் மாங்காய் மண்டி நிக்கல்சன் கால்வாய் ஓரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெருவில், வியாழக்கிழமை 6 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

  பலத்த காற்று வீசியதால், மின்கம்பத்திலிருந்து விழுந்த நெருப்புத் துளிகள் குடிசைகள் மீது விழுந்ததாம். இதில், தொழிலாளர்கள் பத்மா, மல்லிகை, சேட்டு, நாகராஜ், முனியம்மாள், மாலதி ஆகியோரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்தன. இதில், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள் சேதம் அடைந்ததாம்.

  தகவலின்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சா.மணிவேல் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். கிராம நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன், மாமன்ற உறுப்பினர் சு.பிச்சைமுத்து உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நல உதவிகளை வழங்கினர்.

  விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பா.வீரப்பன் வழக்குப் பதிந்துள்ளார்.

  புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

  வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

  மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகநாதன், ஆய்வாளர்கள் கெüரிசுந்தர், ராஜேஷ் உள்ளிட்டோர் இச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்; தனிப்படை அமைப்பு

  வாலாஜாபேட்டை, ஜூலை 18: காவேரிப்பாக்கம் அருகேயுள்ள மேலபுலம்புதூர் ஊராட்சிக்குள்பட்ட நங்கமங்கலம் கிராம ஏரியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த சாக்கு மூட்டையிலிருந்து இளம்பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

  இறந்தவர் யார் என்பது குறித்து காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

  இந்நிலையில், போலீஸாரும், தடயவியல் நிபுணர் பாரி தலைமையிலான குழுவினர்கள் தடயங்களை சேகரித்தனர்.  இவ்வழக்கில் துப்பு துலக்க அரக்கோணம் டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

  மணல் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

  ராணிப்பேட்டை, ஜூலை 18: ராணிப்பேட்டை பாலாற்றில் கோட்டாட்சியர் மு.பிரியதர்ஷினி மற்றும் வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

  அப்போது மணல் கடத்தியதாக 14 மணல் மாட்டு வண்டிகள், 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இவை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

  பொறியாளர் வீட்டில் திருட்டு

  ராணிப்பேட்டை சிப்காட் ஐ.ஓ.பி. நகரைச்  சேர்ந்த பொறியாளர் லோகநாதன் (64). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்துவருகிறார்.  இவர் ஐ.ஓ.பி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வாராம். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த பட்டுப் புடவைகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட 16 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.

  புகாரின்பேரில் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  கிணற்றில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு

  ஆற்காடு அருகேயுள்ள தாஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் டிப்ளமோ பட்டதாரி ராமன் (22), கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவர் ஆற்காடு கிளைவ் பஜாரில் உள்ள ஒரு கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, சடலத்தை பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  அரக்கோணம், ஜூலை 18: அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக ஆந்திரத்துக்குக் கடத்தப்படவிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

  சென்னை-திருப்பதி பயணிகள் ரயிலில் வட்ட வழங்கல் அலுவலர் மணி நடத்திய சோதனையில், இதை பறிமுதல் செய்தார்.

  கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை:

  காப்பாற்ற முயன்ற மாமனாரும் சாவு

  கலசப்பாக்கம், ஜூலை 18: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரசுராமன் (55). இவரது மகன் செல்வம் (32), டெய்லர். இவரது மனைவி சுதா (25).

  இந்நிலையில் புதன்கிழமை இரவு தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது செல்வத்துக்கு ஆதரவாக அவரது தாய் இந்திராணி பேசினாராம். இதனால் மனவேதனை அடைந்த சுதா வீட்டிலிருந்து வெளியேறி அருகேயிருந்த கிணற்றில் குதித்தாராம். அப்போது அவரைக் காப்பாற்ற பின்தொடர்ந்து ஓடிய பரசுராமனும் குதித்தாராம். இதில், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

  இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai