Enable Javscript for better performance
ஆட்டோவில் கடத்தப்பட்ட அம்மன் சிலை பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே ஆட்டோவில் வியாழக்கிழமை நள்ளிரவு கடத்தப்பட்ட அம்மன் சிலையை அரக்கோணம் டவுன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சோளிங்கரை அடுத்த பனவட்டாம்பாடிக்கு வியாழக்கிழமை வாடகைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டபோது அதில் அம்மன் சிலை ஏற்றப்பட்டதாம்.

    இதையறிந்த அந்த ஆட்டோவின் டிரைவர் வெங்கடேசன், அச்சிலை மற்றும் அதைக் கொண்டு வந்த நபர்களுடன் ஆட்டோவை நேராக அரக்கோணம் டவுன் காவல்நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார்.

    டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார், அச்சிலையைப் பறிமுதல் செய்தனர். மேலும் சிலையைக் கொண்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (24), திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தைச் சேர்ந்த ராமன் (55) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலை இரண்டரை அடி உயரம் உள்ளது. சிலை ஐம்பொன் அல்லது பித்தளையாக இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சிலை மணலில் புதைக்கப்பட்ட அடையாளங்களுடன் உள்ளது. சிலை குறித்த தகவல் வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்தபிறகே இச்சிலை பற்றிய விவரங்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai