சுடச்சுட

  

  வஜ்ஜிர தொழிற்சாலைகளுக்கு மீண்டும் அனுமதியா? விவசாயிகள் புகார்

  By வேலூர்,  |   Published on : 20th July 2013 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேர்ணாம்பட்டு பகுதியில் நிலத்தடி நீராதாரம் மாசுபட காரணமாக இருந்த 10 வஜ்ஜிர தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் அவை இயங்க மாசு கட்டுப்பாடு துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

  ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியது:

  விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்துக்கு வழங்கப்படும் மானியத்தில் வேறுபாடு உள்ளது. அதேபோல் சொட்டுநீர் பாசனத்துக்கு வழங்கப்படும் குழாய்கள் தரமற்றவையாக உள்ளன.

  விரிஞ்சிபுரம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைகளை பாதுகாக்க, பாதுகாப்புப் பெட்டகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேர்ணாம்பட்டில் தோட்டக்கலைத் துறை அலுவலகம் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கரும்பு விவசாயிகளுக்ககான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மை கரும்பு அலுவலர்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை. கரும்பு ஆலைகளில் மின்உற்பத்தி திட்டத்தை தொடங்குவதற்காக, 2008-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் கரும்பு தொகையில் இருந்து பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தருவதற்கு அலுவலர்கள் காலதாமதம் செய்கின்றனர். அத்தொகைக்கு 3 சதவீத வட்டி போதாது. கூடுதல் வட்டியை ஆட்சியர் பெற்றுத்தர வேண்டும்.

  கள்ளப்பட்டி கூட்டுறவு களப்பணியாளர் ரேஷன் கடை ஊழியரை உதவிக்கு அழைத்துச் சென்றுவிடுவதால், பெரும்பாலான நேரங்களில் ரேஷன்கடை மூடியேக் கிடக்கிறது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பாலாற்றில் ஏற்கெனவே தோல் கழிவுநீர் தேங்கி நிலத்தடி நீராதாரம் பாழ்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஒரு சில தொழிற்சாலைகள் கழிவுநீர் வெளியேற்றுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளவில்லை.

  வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பகல் நேரத்தில் வெளியேற்றுகின்றன. துர்நாற்றம் வீசும் இந்த கழிவுநீரால் வளையம்பட்டு, கிரிசமுத்திரம் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியினருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.

  பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீராதாரம் முற்றிலும் பாழ்பட்டுள்ளது. பேர்ணாம்பட்டில் கழிவுநீரை வெளியேற்றிய 10 தொழிற்சாலைகள் மீது ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை மூட உத்தரவிட்டார்.

  இதையடுத்து மழையால் நிலத்தடி நீராதாரம் ஓரளவு சீர்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் அந்தத் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதை உடனடியாக ஆட்சியர் தடுக்க வேண்டும். அந்தத் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கினால் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராடுவோம் என்று விவசாயிகள் கூறினர்.

  இதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், கழிவுநீரை வெளியேற்றுவதில்லை என்ற உறுதிமொழியொடு அந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவை கழிவுநீரை வெளியேற்றினால் மூடப்படும் என்று தெரிவித்தார்.

  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் அளித்த பதில்:

  பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலகம் தாற்காலிகமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகள் இருந்தால்தான் கரும்பு அலுவலர்கள் பணியாற்ற முடியும். இதை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

  மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இன்னமும் சுமார் ரூ.2 கோடி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் உள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கு சக விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai