வேலூர் நகைக் கடையில் 4 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் திருட்டு
By வேலூர் | Published on : 20th July 2013 04:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேலூரில் பிரபல நகைக் கடையில் 4 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டன.
வேலூர் லாங்கு பஜார் அருகே மெயின் பஜார் வீதி அமைந்துள்ளது. இங்கு வரிசையாக நகைக் கடைகள் உள்ளன. இப்பகுதியில் நாகா ஜுவல் பேலஸ் என்ற நகைக் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நாகராஜன்.
இக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் வழியாகப் பார்க்கலாம்.
இந்நிலையில், செல்போன் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை கடையைக் கண்காணித்தபோது கேமராக்கள் திசை திரும்பியிருந்தனவாம். இதையடுத்து உரிமையாளர் தரப்பினர் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டுகள் பூட்டியபடி இருந்துள்ளன. பின்னர், கடையைத் திறந்து பார்த்தபோது கடையினுள் இருந்த 4 கிலோ தங்க நகைகளும், ரூ.3 லட்சம் ரொக்கமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
முதல் தளத்தில் உள்ள கழிவறை வென்டிலேட்டர் வழியாக இறங்கிய மர்ம நபர்கள் அருகில் இருந்த லிப்ட் தளத்தினுள் புகுந்து கடைக்குள் வந்து நகைகளையும், ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு அதே பாதையில் திரும்பியுள்ளது போலீஸார் ஆய்வில் தெரியவந்தது.
திருட்டில் ஈடுபட்டவர்கள் தடயங்கள் சிக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக செயல்பட்டிருப்பதாகவும், கையுறைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளதோடு, கண்காணிப்பு கேமராக்களையும் திசை திருப்பியுள்ளனர் என்று ஆய்வை மேற்கொண்ட போலீஸார் தெரிவித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.