Enable Javscript for better performance
சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு ஆயிரக்கணக்கான அழுகிய முட்டைகள் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

    பள்ளியில் பயிலும் தனது மகனை அழைத்து செல்ல வந்த தந்தை இதை கண்டறிந்ததால், பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

    ஆம்பூர் பஜார் அருகேயுள்ள மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளியின் சத்துணவு மையத்துக்கு முட்டைகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மினிவேனில் எடுத்து வந்து இறக்கப்பட்டன.

    அப்போது பள்ளியிலிருந்த தனது மகனை அழைத்து வர மஸியூர் ரஹ்மான் என்பவர் சென்றுள்ளார். அப்போது வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட முட்டைகளிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதுகுறித்து மினிவேன் டிரைவரிடம் அவர் கேட்டுள்ளார்.

    தகவலின்பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹபிபுல்லா ரூமி சில முட்டைகளை சோதனை செய்தபோது, அவை அழுகியிருந்ததும், புழுக்கள் இருந்ததும் தெரியவந்தது.  

    ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் இயங்கிய ஹசனாத்-யே-ஜாரியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஹசனாத்-யே-ஜாரியா நிதியுதவித் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கும் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக எம்எல்ஏ அ. அஸ்லம்பாஷா வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் புகார் செய்தார். இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், ஆம்பூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முட்டைகளைச் சோதனையிட்டனர்.

    இதில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் முட்டைகளில் அழுகிய முட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அப்போது சத்துணவு மையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகில் அஹமத், ஷமீல் அஹமத், இலியாஸ் அஹமத்,  இ. சுரேஷ்பாபு உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    ஆயிரக்கணக்கான முட்டைகள் அழுகல்?

    பள்ளிகளுக்கு முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் லாரிகளில் நேரடியாக முட்டைகளை கொண்டு சென்று விநியோகம் செய்வார். ஒன்றியங்களில் உள்ள ஒப்பந்ததாரர் முட்டைகளை வாகனங்களில் கொண்டு சென்று சத்துணவு மையங்களில் விநியோகம் செய்வார்.

    இவ்வாறாக, மாதனூர் ஒன்றியத்துக்குள்பட்ட சுமார் 110 சத்துணவு மையங்களுக்கும், சுமார் 130 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் 3 லட்சத்துக்கும் மேலான முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாகவும், அப்படி விநியோகிக்கப்பட்ட முட்டைகளில் ஆயிரக்கணக்கானவை அழுகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    விபரீதம் தவிர்ப்பு

    ஆம்பூரில் இயங்கும் இசுலாமிய பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக இருந்தாலும், மாணவர்களுக்கு முட்டைகள் உடனடியாக வழங்கப்படவில்லை.

    சத்துணவு அமைப்பாளர்கள் சரிபார்த்து வாங்க வேண்டிய முட்டைகளை மாணவனின் தந்தை சோதனையிட்டதால், விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணனிடம் கேட்டபோது, மாதனூர் ஒன்றியத்தில் விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai