சுடச்சுட

    

    வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் (24), விபத்தில் இறந்தார்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை வேலூரிலிருந்து சத்துவாச்சாரியை நோக்கி பைக்கில் சென்றார். ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அர்ஜுனன் அதே இடத்தில் இறந்தார்.

    கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு

    வாலாஜாபேட்டை, ஜூலை 21: வாலாஜா அருகேயுள்ள அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ் (35), கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

    இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள சுந்தரராஜனுக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சுரேஷ் தவறி விழுந்தாராம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளார்.

    கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

    ராணிப்பேட்டை, ஜூலை 21: திருவலம் வணிகர் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சரவணன் மகன் ராகுல் (15). இவர் சேர்க்காடு அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் குகையநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்றுள்ளார். அப்போது நீரில் முழ்கி இறந்தார்.

    தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் தாண்டவன் தலைமையிலான வீரர்கள் சென்று, சடலத்தை மீட்டனர். திருவலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    கோழிச்சண்டை நடத்தியதாக 12 பேர் கைது

    குடியாத்தம், ஜூலை 21: குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டியில், மோர்தானா கால்வாய் அருகே கோழிச்சண்டை நடப்பதாக நகர போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை  தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் கோழிச்சண்டை நடத்திக் கொண்டிருந்ததாக பிச்சனூரைச் சேர்ந்த அசோகன்(33), முருகன்(49), காசிநாதன்(35), காளியம்மன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(52), யுவராஜா (47), ஜோதிலிங்கம்(38), சுரேஷ்(36), பெரியார் நகரைச் சேர்ந்த இளையராஜா(35), செதுக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(37), பேர்ணாம்பட்டைச் சேர்ந்த சிக்கந்தர்(37), தாழையாத்தம் சிவராமன்(31), நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த கோபி(22) ஆகிய 12 பேரை கைது செய்தனர். சண்டைக்கு ஈடுபடுத்தப்பட்ட 2 கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  

    இளம்பெண்ணிடம் கேலி; இளைஞர் கைது

    வாணியம்பாடி, ஜூலை 21: வாணியம்பாடியை அடுத்த லாலாஏரி கொல்லகுட்டாயைச் சேர்ந்தவர் சுமதி (27). இவர் தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தனது பைக்கில் வேலைக்குச் சென்றபோது, வளையாம்பட்டைச் சேர்ந்த சங்கர் (30), நேதாஜி நகரைச் சேர்ந்த பரந்தாமன் (33) ஆகிய இருவரும் சுமதியை கிண்டல் செய்தனராம். தட்டிக் கேட்டதால், சுமதியின் மொபெட்டை இருவரும் தீயீட்டுக் கொளுத்தினராம்.  புகாரின்பேரில் வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப் பதிந்து, ஞாயிற்றுக்கிழமை சங்கரை  கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பரந்தமானை தேடி வருகின்றனர்.

    தம்பதி மீது தாக்குதல்; 4 பேர் கைது

    ஆம்பூர், ஜூலை 21: வேப்பங்குப்பம் அருகேயுள்ள அகரத்தில் தனியார் ஷூ கம்பெனிக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அகரம் கூட்டு ரோடில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வேப்பங்குப்பம் போலீஸார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து கட்டடம் கட்ட ஆதரவு தெரிவித்த தம்பதி அகரம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி (38), ஆஷா (29) ஆகிய இருவரும் தாக்கப்பட்டனராம்.

    புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, மராட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (35), கார்த்திக (23), ரங்கசாமி (45), ஆனந்தன் (44) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பூட்டிய வீட்டில் 20 சவரன் நகை திருட்டு

    வேலூர், ஜூலை 21: காட்பாடி ராஜலிங்கம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பத்தூருக்கு சனிக்கிழமை சென்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், மடிகணினி உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai