சுடச்சுட

    

    அழுகிய முட்டைகள் விநியோகம் சத்துணவு மையங்களில் தொடர்ந்த ஆய்வு

    By ஆம்பூர்,  |   Published on : 23rd July 2013 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக, ஆம்பூரில் சத்துணவு மையங்களில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.

    வேலூர் மாவட்டம், ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முட்டைகள் அழுகியிருந்தன. இதுகுறித்து பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தை ஒருவர் கண்டுபிடித்து தகவல் தெரிவித்ததன்பேரில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன் ஆம்பூரில் ஆய்வு மேற்கொண்டு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

    அதைத் தொடர்ந்து, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் பாலையாவை இடைநீக்கம் செய்தும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சிவப்பிரகாசம் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார்.

    மேலும், ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வபாபு, அன்பழகன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்துக்குள்பட்ட ஆம்பூர் மற்றும் கிராமப்புறப் பள்ளிகளின் சத்துணவு மையங்களை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடத்திய ஆய்வில் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் மீது முத்திரை இடப்படாமல் இருந்துள்ளது. மேலும், விநியோகம் செய்யப்பட்ட முட்டைகளை சத்துணவு பணியாளர்கள் வேகவைத்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக அவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோதனை செய்து பார்த்ததில், அதிலும் சில முட்டைகள் அழுகியிருந்தது தெரியவந்தது. மாணவர்களுக்கு அவற்றை வழங்கக் கூடாது என்றும் அந்த முட்டைகளை அப்புறப்படுத்துமாறும் உத்தரவிட்டனர்.

    மேலும், சத்துணவு அமைப்பாளர் பராமரிக்கும் பதிவேடுகளை சோதனையிட்டனர்.  இதில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பதிவேடுகளில் எந்தப் பதிவும் செய்யப்படாமல் காலியாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மாணவர்கள் உண்ணும் தட்டுகள் துரு பிடித்திருந்ததாம். அந்த தட்டுகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கக் கூடாது என அறிவுறுத்தினர். பதிவேட்டை பறிமுதல் செய்தனர்.

    முத்திரை இல்லை:  அழுகிய முட்டைகள் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்யப்பட்ட ஹசனாத்-யே-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் தொடக்கப் பள்ளி, ஹசனாத்-யே-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளிகளில் அழுகிய முட்டைகளுக்கு பதில் மாற்றாக வழங்கப்பட்ட முட்டைகளையும் ஆய்வு செய்தனர். அவற்றிலும் முத்திரையிடப்படாமல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai