சுடச்சுட

  

  வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 671 மனுக்கள் பெறப்பட்டன.

  கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.சங்கர் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பட்டா, பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 671 மனுக்கள் பெறப்பட்டன.

  தாராபடவேடு, காட்பாடி பகுதியில் மசூதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குடியிருப்பு பகுதிகள் அருகே டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் திறக்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரி அகலா சுன்னத் வல் ஜமாத் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

  குடியாத்தம் தாலுகா, தட்டபாறை ஊராட்சி, வெள்ளேரி கிராமத்தில் ரூ.33 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிக்க முடியவில்லை. தரமற்ற குழாய்கள் பதிக்கப்பட்டதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை பார்வையிட்டு அதை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

  ஒடுக்கத்தூரை அடுத்த கொண்டத்தூர் உமையம்பட்டு கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை விஏஓ மற்றும் கிராம சிப்பந்தி உதவியுடன் போலி பட்டா தயாரித்து சிலர் விற்றுள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் என வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் படைவீரர் ஆனந்தனின் மனைவி ஏ.அம்பிகா புகார் மனு கொடுத்தார்.

  நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் சார்பில் குடியாத்தம் வட்டம், வளத்தூரை சேர்ந்த 43 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு ரூ.3.24 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai