Enable Javscript for better performance
பாஜக மறியல், கடையடைப்பு: மாவட்டத்தில் 262 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாஜக மறியல், கடையடைப்பு: மாவட்டத்தில் 262 பேர் கைது

    By வேலூர்,  |   Published on : 23rd July 2013 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 262 பாஜகவினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கும் பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் வேலூர் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் காலை 9 மணி வரையில் வணிக வளாகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள் இயங்கின. நேரம் செல்லச்செல்ல அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டு செயல்பட்டன. ஆம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பஸ் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து வழக்கம்போல் இருந்தன. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் செல்வோர் எவ்வித பாதிப்பும் இன்றி சென்று திரும்பினர்.

    மறியல்: மாவட்டத்தில் 20 இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் நகரில் ஆபிசர்ஸ் லைனில் 3 இடங்களில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். பிற இடங்களில் நடந்த மறியலில் 200 பேர் கைதாகினர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    ஆம்பூர்

    ஆம்பூரில் கடைகளை அடைக்க வலியுறுத்தியும், சாலை மறியலும் செய்த 40 பாஜகவினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    வேலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கொ.வெங்கடேசன், ஆம்பூர் நகரத் தலைவர் எம்.அன்பு, மாவட்ட பொதுச் செயலர் வாசுதேவன், நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.சி.சீனிவாசன், மாவட்டச் செயலர் தண்டபாணி, மாதனூர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார், இந்து முன்னணி நகரத் தலைவர் ஏழுமலை, மாவட்ட சிறுபான்மை அணித் தலைவர் ரபீக் அஹமத் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம்

    அரக்கோணம் சுவால்பேட்டை, பஜார், பழனிபேட்டை மற்றும் நகர முக்கிய வீதியான காந்தி ரோட்டிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    சுவால்பேட்டை முருகப்பநாயக்கன் தெருமுனையில் காஞ்சிபுரம்-திருப்பதி சாலையில் நகர பாஜகவினர் மாவட்ட பாஜக பொதுசெயலர் முத்துகுமரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக நகரத் தலைவர் லியோ வேலு, ஒன்றிய முன்னாள் தலைவர் ரமேஷ், வழக்குரைஞர் பிரிவு மாவட்டத் தலைவர் தனசேகரன், கண்ணன், நகரச் செயலர் நாராயணன், துணைத் தலைவர் ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, ஹரி, சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நெமிலி: நெமிலியில் மாவட்டத் தலைவர் பாபாஸ்பாபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவர் கோபால், பொதுச் செயலர் நவஜீவன், இளைஞரணி மாவட்டச் செயலர் சிவகுமார், காமராஜ், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    குடியாத்தம்

    குடியாத்தம் சித்தூர்கேட்டில் பாஜக ஒன்றியத் தலைவர் பிரகாசம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

    ஆற்காடு

    ஆற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாஜக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தணிகாசலம், மாவட்டச் செயலாளர் லோகநாதன், நகரத் தலைவர் நீலகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் கா.சிவபிரகாசம், நகரத் தலைவர் சிவக்குமார், நகர பொதுச்செயலர் தெய்வமுருகன், செயலர்கள் வேலு, உதயம், ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    வாலாஜாபேட்டை

    வாலாஜாபேட்டையில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக நிர்வாகி வெங்கடராமன், ரஜேஷ், செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வாலாஜா பஜார் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல சோளிங்கரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக நிர்வாகிகள் குமரகுருபரன், சுந்தரம், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai