சுடச்சுட

    

    சத்துணவுத் திட்டத்தில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை

    By வேலூர்,  |   Published on : 24th July 2013 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவுத் திட்டத்தில் சமைப்பது முதல் குழந்தைகளுக்கு பரிமாறுவது வரையில் எவ்வித குறைபாடோ, தவறோ இருக்கக் கூடாது. அப்படி கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்களுக்கு தமிழக சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி எச்சரிக்கை விடுத்தார்.

    மாதனூர் ஒன்றிய அலுவலகம் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் உள்ள பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ஆம்பூர் பள்ளிகள் மற்றும் மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வளர்மதி, அதைத் தொடர்ந்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு காலை 11 மணியளவில் வந்தார். ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், சத்துணவு சமைப்பது முதல் குழந்தைகளுக்கு பரிமாறுவது வரை சத்துணவு ஊழியர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடும், எச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு அல்லது தவறு நேரிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இக்கூட்டத்தை அடுத்து சென்னை புறப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வர் உத்தரவின் பேரில் சத்துணவுத் திட்டம் தொடர்பான ஆய்வுக்கு வந்தேன்.

    மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தை குறைபாடின்றி சிறப்பாக செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தில் யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    "கலவை சாதம்' திட்டம் பரிசோதனை அடிப்படையில் ஒரு சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

    5 ஆயிரம் மையங்களில் திடீர் ஆய்வு: மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் 5 ஆயிரம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள 20 அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளன என்று ஆட்சியர் பொ.சங்கர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai