Enable Javscript for better performance
சமூக நலத்துறை செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அழுகிய முட்டைகள் விநியோகம் சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை இரவு வரை தொடர்ந்து சமூக நலத்துறை செயலர் விசாரணை நடத்தினார்.

    அவப்பெயர்

    ஏற்படுத்திவிட்டீர்களே?

    ரூ.1800 கோடி திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டீர்களே என ஆம்பூர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை செயலர் பி.எம். பஷீர் அஹமத் வருத்தத்துடன் தெரிவித்தார்.

    ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் ஏ-கஸ்பா அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

    அங்கு பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோரிடம் கெட்டுப் போன முட்டைகளை எவ்வாறு கண்டறிகிறீர்கள் எனக் கேட்டார்.  மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களையும் பார்வையிட்டார். வகுப்பறைகளுக்குச் சென்று பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். இதையடுத்து, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஹபிபுல்லா ரூமியை அழைத்து பேசிய அரசு செயலர், தமிழக அரசின் ரூ.1800 கோடி திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வீட்டீர்களே. இது ஒரு சாதாரண பிரச்னை.  இதனை நீங்கள் திறமையாக சமாளித்திருக்கலாம் என வருத்தத்துடன் கூறினார்.

    இரவு வரை தொடர்ந்த

    செயலரின் ஆய்வு

    அழுகிய முட்டைகளைக் கண்டறிந்த பள்ளி மாணவரின் தந்தை மஸியூர் ரஹ்மான், 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆகில் அஹமத் ஆகியோரிடம் துறைச் செயலர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது அவர்கள் கூறிய விவரங்கள் உடனடியாக கணினியில் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த விசாரணை இரவு 9.30 மணியளவிலும் தொடர்ந்து நடைபெற்றதாக அரசுத் துறை அதிகாரிகள் கூறினர். 

    புதிய முட்டைகள்

    அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு திங்கள்கிழமை முத்திரையிடப்படாத புதிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. துறையின் அமைச்சர் பா. வளர்மதி பள்ளிக்கு ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு திங்கள்கிழமை வழங்கப்பட்ட முத்திரையிடப்படாத முட்டைகளுக்கு பதிலாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அப்பள்ளிக்கு வர்ணம் பூசப்பட்ட புதிய முட்டைகள் மீண்டும் மாற்றி வழங்கப் பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறினர்.

    சமூக நலத்துறை இயக்குநர் சேவியர் கிறிúஸா நாயகம், ஆட்சியர் பொ. சங்கர், சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வபாபு, அன்பழகன், அதிமுக ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, தொகுதிச் செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai