சுடச்சுட

    

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரைவில் எம்பிஏ, எம்சிஏ பாடப் பிரிவுகள்

    By வேலூர்  |   Published on : 25th July 2013 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரைவில் எம்சிஏ, எம்பிஏ பாடப் பிரிவுகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதன் துணைவேந்தர் பி.குணசேகரன் தெரிவித்தார்.

    பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: துணைவேந்தர் பொறுப்பை நான் ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பணிகள் ஒரு சிலவற்றை நிறைவேற்றியுள்ளேன். குறிப்பாக பல்கலைக்கழகம் தொடங்கி 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அதற்குரிய 12 பி அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் மற்றும் வழிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, கடந்த 17-ம் தேதி நேரடியாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் 12 பி அந்தஸ்து வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக மானியக் குழுவினர் பல்கலைக்கழகத்தை 3 மாத காலத்துக்குள் ஆய்வு செய்வர். அதைத் தொடர்ந்து 12 பி அந்தஸ்து அடுத்த 3 மாத காலத்துக்குள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    ஒருசில நிர்வாக காரணங்களால், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தாற்காலிக பணியாளர்கள் 97 பேரை பணி நிரந்தரம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பல்கலைக்கழக சட்ட விதிகள்படி ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    ஓர் ஆசிரியருக்கு 2 பணியாளர்கள் வீதம் பணி நியமனத்துக்கான அனுமதி வரும் செப்டம்பர் மாதத்தில் நிதிக்குழுவிடம் பெறப்படும். உடனடியாக சிண்டிகேட் அனுமதியும் பெறப்பட்டு தாற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளின் சார்பில் 14 கல்விக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கல்லூரிகளைக் கண்காணிக்கும் அதிகாரம் பெற்ற கல்லூரி வளர்ச்சிக் குழு டீன் நியமனத்துக்கான அனுமதியை பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.

    மாவட்ட விளையாட்டரங்கம்: பல்கலைக்கழகப் பகுதியில் மாவட்ட விளையாட்டரங்கம் அமைவதற்காக 12 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளோம். அதில் முதலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான பாதை, கால்பந்து மைதானம் உள்ளிட்டவை அமையவுள்ளன.

    பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக ஒரு பேருந்து விரைவில் வாங்கப்படவுள்ளது. தேர்வுத் துறையை முற்றிலும் கணினி மயமாக்குவதற்காக ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்தில் நூலகத்துக்காக ரூ.7 லட்சம் மதிப்பில் புத்தகங்களும், 25 கணினிகளும் வாங்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு 2-வது தவணையாக ரூ.21 கோடி நிதியை அரசிடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இதன் மூலம் மாணவர் விடுதி, பேராசிரியர்கள் குடியிருப்பு, துணைவேந்தர் குடியிருப்பு, பல்கலைக்கழக அரங்கம், ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

    பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஆனது. புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார் குணசேகரன்.

    பல்கலைக்கழகப் பதிவாளர் என்.ஜெயக்குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் சையத் ஷபி ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai