சுடச்சுட

    

    "மாற்று அரசியல் கொள்கையை உருவாக்க இடதுசாரிகள் முயற்சி'

    By வேலூர்  |   Published on : 26th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரவுள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று அரசியல் கொள்கை பாதையை உருவாக்க இடதுசாரி கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறினார்.

    வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:

    நாட்டின் பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற தவறான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது.

    தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீடு, பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

    இவை நாட்டின் வளர்ச்சிக்கும், தேச நலனுக்கும் உகந்த முடிவுகள் அல்ல என்று ஏற்கெனவே எங்கள் கட்சி சார்பில் தெரிவித்துள்ளோம். மக்களவை மழைக்கால கூட்டத் தொடரின்போது இப்பிரச்னையை நாங்கள் எழுப்புவோம்.

    மாற்றுக் கொள்கை: தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சி எந்த அளவில் உள்ளது என்று கேட்கிறீர்கள். 3-வது அணி என நாங்கள் குறிப்பிடவில்லை. இம்மாத தொடக்கத்தில் தில்லியில் இடதுசாரி கட்சிகளிடையிலான மாநாடு நடைபெற்றது. அதில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்டது.

    நாட்டின் பொருளாதார கொள்கைகள், நிதிக்கொள்கைகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லை. இதனால்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிந்து போயுள்ளது.

    வேலையில்லாத் திண்டாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை  பலப்படுத்துவதற்கும், ஒரு மாற்றுக் கொள்கை தேவைப்படுகிறது.

    எனவே, காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று கொள்கையுடைய அரசியல் பாதையை உருவாக்க இடதுசாரி கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன.

    இது ஒரு தேர்தல் அணியாக இப்போதே உருவாகிவிடுமா என்று சொல்ல இயலாது. மக்களவைத் தேர்தலின்போது தேசிய அளவில் ஓர் அணி உருவாகவில்லையென்றாலும், அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப, அரசியல் சூழலுக்கு ஏற்ப, இடதுசாரி கட்சிகள் தேர்தல் உடன்பாட்டின் மூலம் அணிகளை உருவாக்க முயற்சிக்கும். தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பையொட்டி ஒரு மாற்று ஆட்சியை உருவாக்குவது பற்றி யோசிப்போம்.

    வரவேற்கத்தக்க அதிமுக அரசு: தமிழகத்தில் அதிமுக, இடதுசாரி கட்சிகளுடனான உறவு நல்ல முறையில் உள்ளது. அதிமுக அரசு பல்வேறு நிலைகளில் முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

     என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்ததோடு, அதை அரசு வாங்கிக் கொள்ளும் என அறிவித்தது நல்ல முன்மாதிரியாகும்.

    இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்திய மீனவர் பிரச்னை ஆகியவற்றில் தமிழக அரசு வரவேற்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகிறது என்றார் ராஜா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai