சுடச்சுட

  

  வேலூர் நகைக்கடையில் திருட்டு பெங்களூர் இளைஞரிடம் விசாரணை

  By வேலூர்  |   Published on : 27th July 2013 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் நகைக் கடை ஒன்றில் 4 கிலோ தங்க நகைகள் திருட்டு போன வழக்கு தொடர்பாக பெங்களூரில் இளைஞர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வேலூர் மெயின் பஜாரில் உள்ள நாகா ஜுவல் பேலஸில் கடந்த 18-ம் தேதி இரவு வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.

  இந்நிலையில், பெங்களூர் பன்னர்கட்டா தேசியப் பூங்கா அருகே ஒரு நகைக் கடைக்கு 600 கிராம் தங்கத்துடன் சென்ற இளைஞரை பெங்களூர் மாநகரப் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் அந்த இளைஞர் ஒசூரைச் சேர்ந்த ஆனந்த் (23)  என்பதும், பெங்களூர் மாநகரில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அத்துடன் அவர் கொண்டு சென்ற நகை வேலூரில் உள்ள நகைக் கடையில் திருடப்பட்டது என்பது தெரியவந்ததை அடுத்து பெங்களூர் போலீஸார் அந்த இளைஞரை வேலூருக்கு அழைத்து வந்தனர்.

  வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்த இளைஞரிடம் வேலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நகைக் கடை உரிமையாளர் சிசிடிவி மூலம் பதிவு செய்த விடியோ பதிவுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ராஜேஷ் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரும் விடியோ பதிவில் உள்ள இளைஞர் அவர்தான் என்பதை உறுதி செய்தார்.

  அதைத் தொடர்ந்து இளைஞரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆனந்துக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் ராமசாமி என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனந்த் திருட்டு நடத்த திட்டமிடும் கடைகளைப் பற்றிய விவரங்கள், வழிமுறைகள் குறித்து ராமசாமி தகவல் சேகரித்து அளித்து வந்தாராம். இதனால் அவரைப் பிடித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

  ஆனந்த் பிடிபடுவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு 10 கிலோ வெள்ளியுடன் ராமசாமி மற்றோர் இடத்துக்குச் சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து வெள்ளிக்கிழமை இரவுக்குள் அவரைப் பிடிப்பதற்கான முயற்சியை பெங்களூர் போலீஸார் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

  ராமசாமி மீது தமிழகம் மற்றும் பெங்களூரில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனந்த் 13 வயது முதல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருட்டு வழக்கு ஒன்றில் காவல் துறை பாதுகாப்பில் சென்றபோது தப்பிச் சென்றவர் என்பதையும் போலீஸார் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai