சுடச்சுட

    

    உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் 81 கோடி பேருக்கு பயன்

    By வேலூர்,  |   Published on : 29th July 2013 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் நாட்டில் 81 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவர் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

    வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீநாராயணி பீடத்தில் 600 ஏழை மாணவ, மாணவியருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று வாசன் பேசியது: கல்விக் கண் திறந்த காமராஜர் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் கல்வி சிறந்து விளங்கினால்தான் சிறந்த முன்னேற்றம் அடையும் என்பதை உணர்ந்து கிராமங்கள்தோறும் பள்ளிகளை நிறுவினார். அத்துடன் ஏழை மாணவர்களுக்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருவதன் மூலம் 14 கோடி மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர்.

    2013-14ஆம் ஆண்டில் கல்விக்காக மத்திய அரசு ரூ.27 ஆயிரத்து 258 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 873 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 20 கோடி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தையும், வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்துக்காக பல கோடியை ஒதுக்கீடு செய்து 5 கோடி குடும்பங்கள் பயன்பெறச் செய்துள்ளது. அடுத்த மாதம் நாட்டில் கொண்டு வரப்படும் உணவு பாதுகாப்புச் சட்டத்தால் 81 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறவுள்ளனர்.

    ஸ்ரீநாராயணி பீடத்துக்கு பாராட்டு

    நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக ஸ்ரீபுரம் உருவெடுத்துள்ளது. சாதி, மதம், இனங்களைக் கடந்து தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணமாக இந்த ஆன்மிகத் தலம் விளங்குகிறது.

    ஸ்ரீநாராயணி பீடம் கடந்த 20 ஆண்டுகளில் ஆன்மிகம், கல்வி, மருத்துவம், ஏழை எளியவர்களுக்கு நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஏழைகளுக்கு இலவச திருமணஙகள் என செய்துள்ள பன்முக பணிகள் நம்மை வியக்க வைக்கின்றன. அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும், சக்தி அம்மா போன்றவர்கள் பலர் இருந்தால் நாடு மிக விரைவாக வல்லரசாக மாறும் என்றார் வாசன்.

    எம்எல்ஏ ம.கலையரசு, முன்னாள் எம்எல்ஏ சி.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai