Enable Javscript for better performance
பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது; பள்ளி மாணவர் உள்பட 3 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது; பள்ளி மாணவர் உள்பட 3 பேர் சாவு

    By திருவண்ணாமலை,  |   Published on : 29th July 2013 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் பள்ளி மாணவர் உள்பட 3 பேர் இறந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சண்முகம் (48). இவர், இலுப்பந்தாங்கல் கிராமத்தையொட்டி, ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசுத் தொழிற்சாலையை 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    இத்தொழிற்சாலையில் விடுமுறை நாட்களில் பள்ளிச் சிறுவர்கள் வந்து வேலை செய்வார்களாம். ஞாயிற்றுக்கிழமை 4 பேர் தொழிற்சாலையில் பட்டாசுத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் நால்வரில் ஒருவர் மட்டும் மதிய உணவு சாப்பிட்டு வருவதாகக் கூறி விட்டு சென்று விட்டாராம்.

    இந்நிலையில், மாலை 4 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, பட்டாசு தொழிற்சாலை தரைமட்டமாகி புகை மண்டலமாக மாறியிருந்தது தெரியவந்தது.

    3 பேர் சாவு: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுபாஷ் (14), ராஜந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஐயப்பன் (14). இவர் ராஜந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மகன் சின்னராஜ் (14).

    ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த இம் மூவரில் சுபாஷ், ஐயப்பன் ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி இறந்தனர். இருவரின் சடலங்களும் தொழிற்சாலையில் இருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டிருந்தன.

    படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சின்னராஜ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    சாலை மறியல்: தகவலறிந்த ராஜந்தாங்கல், இலுப்பந்தாங்கல், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். அப்போது பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளரை உடனே கைது செய்ய வேண்டும். இனிமேல் பட்டாசுத் தொழிற்சாலை நடத்த அனுமதி தரக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதிகாரிகள் விசாரணை: விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.வளர்மதி, கோட்டாட்சியர் தி.காசி, வட்டாட்சியர் வேடியப்பன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அமைச்சர் ஆறுதல்: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    உரிமையாளர் கைது: இதற்கிடையே, பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் சண்முகத்தைப் போலீஸார் கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்தும், சிறுவர்களை பணியில் அமர்த்தியது ஏன் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai