சுடச்சுட

    

    அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு; திமுகவினருக்கே திட்டப் பணி

    By வேலூர்,  |   Published on : 30th July 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :வேலூர் மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. திமுக உறுப்பினர்களே அதிக திட்டப் பணிகளை பெறும் நிலை காணப்படுகிறது என்று மாநகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சூரியாச்சாரி புகார் கூறினார்.

    மாநகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயர் பி.கார்த்தியாயினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் ஜானகி ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசு வாங்கும் முடிவை முதல்வர் அறிவித்து செயல்படுத்தியமைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் கொண்டு வந்தார்.

    வார்டுகளில் குடிநீர் விநியோகம் போதவில்லை?

    அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் குடிநீர் பிரச்னை, தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.

    வார்டுகளில் குடிநீர் பிரச்னை நிலவும் நிலையில், இரு டேங்கர் லாரி குடிநீர் மட்டும் போதவில்லை என்று உறுப்பினர்கள் குறை கூறினர். உடனடியாக வார்டுகளுக்கு 5 டேங்கர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    மாநகராட்சிக்கு குப்பைத் தொட்டி வந்து நீண்ட நாள்கள் ஆகியும், அதை வார்டுகளுக்கு விநியோகம் செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

    கொசுத் தொல்லை அதிகரிப்பு?

    "மாநகரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கொசு ஒழிப்பு புகை ஏன் அடிப்பதில்லை' என உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

    "கொசுக்களை அழிக்க பயன்படுத்தும் ஃபாக் இயந்திரம் பழுதடைந்துள்ளது. உடனடியாக அது சீர்செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்படும்' என ஆணையர் பதில் தெரிவித்தார்.

    "புதிதாக ஆழ்துளைக் கிணறு போடுவதால் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க முடியாது. காரணம் நிலத்தடி நீராதாரம் 800 அடிக்கு மேல் சென்றுவிட்டது. எனவே, நீராதாரம் உள்ள ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்' என மேயர் யோசனை தெரிவித்தார்.

    "மண்டல அலுவலகங்களுக்கு வரம்பு நிர்ணயிப்பது

    பொருத்தமற்றது'

    "மண்டல அலுவலகங்களில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் மதிப்புக்கு திட்டப் பணிகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அளித்தாலும், ஓராண்டுக்கு அதிகபட்சம் வரம்பாக ஆண்டுக்கு ரூ.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது' என அதிமுக உறுப்பினர் சூரியாச்சாரி குறை கூறினார்.

    "நிதி ஒதுக்கீட்டில் பராபட்சம்'

    "41-வது வார்டுக்கு திட்டப் பணிகள் ஒதுக்குவதில்லை. 8 மாதம் முன்பு இரு திட்டப் பணிகளுக்கான தீர்மானம் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு சரி, அதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவில்லை. மேயர் அதிமுகவால் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் மாநகராட்சியில் திமுக உறுப்பினர்களின் வார்டுகளுக்கு அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளை காட்டிலும் அதிக திட்டப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதில் ஆணையரும் பாரபட்சமாக செயல்படுகிறார்' என்று சூரியாச்சாரி புகார் தெரிவித்தார்.

    "திட்டப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில் எந்த வார்டுக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாய் மூலம் எந்தெந்த திட்டப் பணிகளுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முன்னுரிமை மட்டுமே அளிக்கப்படுகிறது' என ஆணையர் விளக்கம் அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai