Enable Javscript for better performance
மருத்துவப் படிப்பு \\\"சீட்\\\' பெற்றுத் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

  

  மருத்துவப் படிப்பு "சீட்' பெற்றுத் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது

  By வேலூர்,  |   Published on : 30th July 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலம், எச்எஸ்ஆர் லேஅவுட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவரது மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறி வேலூர், ஆரணி சாலையில் கணினி மையம் நடத்தி வரும் திருமால் (37), தனியார் மருத்துவமனை ஊழியர் அன்பழகன் (45), தனியார் வங்கி ஊழியர் தினகரன் ஆகியோர் ரூ.15 லட்சம் பெற்றதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது இவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் தெற்கு காவல் நிலையத்தில் வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தார்.

  அவரது புகாரின் பேரில் திருமாலை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

  சிறையில் செல்போன் பறிமுதல்வேலூர், ஜூலை 29: வேலூர் மத்தியச் சிறையில் செல்போன் ஒன்று திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

  சிறை வளாகத்தில் புதிய கட்டடம் அமைந்துள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த செல்போன் பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  மாடியிலிருந்து விழுந்த மாணவர் சாவு

  வேலூர், ஜூலை 29: வேலூர் டிட்டர் லைன் உசேன்புராவைச் சேர்ந்த இப்ராஹீம் ஷெரீப் மகன் நூருல்லா (16), மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.

  இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்வீட்டு மொட்டை மாடியில் நின்று பட்டம் விட்டாராம். அப்போது கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.

  வயதான தம்பதியிடம் நகை திருட்டு

  ஆம்பூர், ஜூலை 29: மாதனூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் பழனி (81). இவரது மனைவி சரஸ்வதி (75).

  கடந்த சனிக்கிழமை பைக்கில் வந்த ஒரு நபர் பெங்களூரில் வசிக்கும் அவர்களது மகன் அனுப்பியதாகக் கூறி, செல்போன் டவர் அமைக்க இடம் வாடகைக்குக் கேட்டாராம்.

  பின்னர் நிலத்தில் மண் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, மூணேகால் சவரன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு காணாமல் போனாராம். புகாரின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  மண் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

  வாலாஜாபேட்டை, ஜூலை 29: சோளிங்கர் அருகேயுள்ள பரவத்தூர் ஏரியில் மண் கடத்தியதாக, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

  அரக்கோணம் வட்டாட்சியர் (பொறுப்பு) மீனாட்சிபெருமாள் இதை பறிமுதல் செய்து, சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

  பாம்பு கடித்து மாணவி சாவு

  ராணிப்பேட்டை, ஜூலை 29: பொன்னை அருகேயுள்ள பரமசாத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டுரங்கன் மகள் கனிமொழி (16), பாம்பு கடித்து இறந்தார்.

  இவர் பொன்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கனிமொழி வீட்டில் தனது குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்ததாம். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

  பெண் மீது தாக்குதல்: 3 பேர் கைது

  மேல்பாடி அருகேயுள்ள கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ரமேஷ். இவருக்கும், எதிர்வீட்டைச் சேர்ந்த சதீஷின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம்.

  இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி ரமேஷின் மனைவி லட்சுமி (23), சதீஷின் குடும்பத்தினரைப் பார்த்து திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் (24), சதீஷின் மனைவி மலர் (20), அவரது அக்கா கிரிஜா (40) ஆகியோர் லட்சுமியைத் தாக்கினராம்.

  புகாரின்பேரில் மேல்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

  தொழிலாளி வீட்டில் 10 சவரன் திருட்டு

  அரக்கோணம், ஜூலை 29: அரக்கோணத்தை அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (43). ஞாயிற்றுக்கிழமை இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை மாடி படிக்கட்டுக்கு கீழே வைத்து வெளியே சென்றாராம்.

  மாலை திரும்பி வந்து சாவியை எடுத்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளும், ரொக்கம் ரூ.500-ம் திருடு போனதும், சாவியை எடுத்து திருடு நடைபெற்றதும் தெரியவந்தது. புகாரின்பேரில் அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai