Enable Javscript for better performance
வாலாஜா அருகே பரிதாபம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பக்தர்கள் ரயில் மோதி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜா அருகே பரிதாபம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பக்தர்கள் ரயில் மோதி சாவு

    By ராணிப்பேட்டை  |   Published on : 30th July 2013 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம், வாலாஜா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, 4 பக்தர்கள் விரைவு ரயில் மோதி இறந்தனர்.

    ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளைச்  சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக ஆன்மிகப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

    ரத்தினகிரி முருகன் கோயில், வள்ளிமலை முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வாலாஜா ரயில் ரோடு ரயில் நிலையத்தில் தங்கினர்.

    இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இவர்களில் 4 பேர் ரயில் நிலையம் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, ரயில் நிலையத்துக்குத் திரும்ப தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர்.அப்போது அந்த வழியே வந்த ஆலப்புழாவிலிருந்து சென்னையை நோக்கிச் சென்ற விரைவு ரயில் அவர் மீது மோதியது.

    3 பேர் சம்பவ இடத்திலேயே சாவு

    இதில், குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி அருகேயுள்ள லட்சுமியம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமியின் மகன் ஆனந்தன் (47), மேல்கார்ப்பூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாபு மகன் ஜெகதீஷ் (18), தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், இரும்பத்தூர் ஊராட்சிக்குள்பட்ட கொண்றம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் சிங்காரவேலு (20) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    படுகாயமடைந்த, ஆம்பூரை அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள இந்திரா நகர் சாய்பாபா கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நவீன் (25) வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

    தகவலின்பேரில் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் ரஜானா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களைக் கைப்பற்றி  பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணிப்பேட்டை டிஎஸ்பி லாவண்யா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

    இறந்தவர்களில்

    2 பேர் மாணவர்கள்

    விபத்தில் இறந்த ஆனந்தன் லட்சுமியம்மாள்புரத்தில் டீக் கடை நடத்திவருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், லோகேஸ்வரன், பிரேம் என்ற 2 மகன்களும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். ஜெகதீஷ்  பொறியியல் கல்லூரியிலும், சிங்காரவேலு கலைக் கல்லூரியிலும் படித்துவந்தனர். நவீன் தனியார் பேருந்தில் கிளீனராக பணிபுரிந்து வந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai