கல்வி அறக்கட்டளை நிறுவனர் மகன் படுகொலை

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே கல்வி அறக்கட்டளை நிறுவனரின் மகன் சரவணசுந்தர் படுகொலை செய்யப்பட்டார்.
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே கல்வி அறக்கட்டளை நிறுவனரின் மகன் சரவணசுந்தர் படுகொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் நந்தனம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை என்ற கல்விக் குழுமத்தை 2001-ல் ஆரம்பித்தார்.

இதில் நந்தனம் பொறியியல் கல்லூரி, நந்தனம் பாலிடெக்னிக் கல்லூரி, நந்தனம் சர்வதேச ஆங்கிலப் பள்ளி உள்பட பல கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நந்தகோபாலுக்கு சரவணசுந்தர் (42), மோகனகிருஷ்ணன் (38), சங்கர் (34) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வருடம் நந்தகோபால் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் அவர் இறந்துவிட்டார்.

அவரது இறப்புக்குப் பின் கல்வி நிறுவனங்களை இரண்டாவது மகன் மோகனகிருஷ்ணன் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், திருப்பத்தூரை அடுத்த பெருமாபட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு சரவணசுந்தர் வியாழக்கிழமை காலை திருப்பத்தூரிலிருந்து சென்றார். ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். தோட்டத்துக்கு அருகில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் சரவணசுந்தரை எட்டி உதைத்து கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு, கை, முதுகுப் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சரவணசுந்தர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிறிது நேரத்துக்குப் பின், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணசுந்தர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு குரிசாலப்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா, காவல் ஆய்வாளர் குணசேகரன் (பொறுப்பு), போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகொலை குறித்து சரவணசுந்தரின் மனைவி அருணாஜானகிதேவி அளித்த புகாரின் பேரில் குரிசாலப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com