காட்பாடி-திருவலம் இடையே உயர் அழுத்த மின்கம்பிகள் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அறுந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக திருவலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை நகரின் ஒரு பகுதி, வாலாஜா நகரில் மும்முனை மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இருமுனை மின்சாரத்தால் வீடுகளில் விளக்குகள் குறைந்த வெளிச்சத்துடன் எரிந்தன. தொலைக்காட்சி, பிரிட்ஜ், மிக்ஸி, மின்விசிறி போன்ற மின்சாதனங்கள் இயங்கவில்லை.
இதுகுறித்து ராணிப்பேட்டை பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கு தொலைபேசி எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் இரவு 9.40 மணியளவில் திரண்டு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், காட்பாடி-திருவலம் இடையே பழுதடைந்த உயர்அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இரவுக்குள் மின்விநியோகம் சீராகும் என்றார்.