ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(51) ரயில்வே உணவகத்தில் வேலை செய்கிறார். இவர் வியாழக்கிழமை அதிகாலை 4வது நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் சண்முகத்தின் பேண்ட் பாக்கெட்டிருந்த செல்போனை திருடிக் கொண்டு ஓட முற்பட்டாராம். இதனைக் கண்ட பயணிகள் அவரை மடக்கிப் பிடித்து ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் செல்லதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கர்நாடக மாநிலம் கேஜிஎப் கொரமண்டல் பகுதியைச் சேர்ந்த தாமஸ் ரூபன் குமார் (40) என்பதும், கடந்த ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த ரயில் பயணி சத்யாவிடம் நான்கரை சவரன், செல்போனையும், திருச்சியைச் சேர்ந்த சத்யநாதன் என்பவரிடமிருந்து
2 சவரன் நகையையும், வடமாநிலத்தைச் சேர்ந்தவரிடமிருந்து அரை சவரன் நகையை திருடியதும் தெரிய வந்தது.
மேலும் பெங்களூரு ஹிலாஅல்லி பகுதியில் உள்ள அறையில் பதுக்கி வைத்திருந்த 7 சவரன் நகைகள், 2 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தாமஸ் ரூபன் குமாரை போலீஸார் கைது செய்தனர்.