வேலூர் புதிய பஸ் நிலையத்தை ரூ.35 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தி, நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையமாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கையை பெற்ற சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு, அரசுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தப் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தது.
தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் பாப்பாசுந்தரம் தலைமையில் உறுப்பினர்கள் காமராஜ், சீனிவாசன், தங்க தமிழ்ச்செல்வன், தன்சிங், நீலகண்டன், பழனிச்சாமி, ஜான் ஜேக்கப், ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழு வேலூர் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தது.
இக்குழுவினர் முதலில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்குச் சென்றனர். பஸ் நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பான அறிக்கையை ஆணையர் ஜானகி ரவீந்திரன் அளித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரைக்குமாறு மேயர் பி.கார்த்தியாயினி கேட்டுக் கொண்டார்.
புதிய பேருந்து நிலைய வரைபடத்துடன் ஆய்வை மேற்கொண்ட குழுவினர், பஸ் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
ரூ.35 கோடியில் பஸ் நிலையத்தை விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் சரிபாதி தொகை நிலம் கையகப்படுத்த தேவைப்படுகிறது என்றும் வரைபடக் குழுவினர், மதிப்பீட்டுக் குழுவிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆவினில் ஆய்வு
இதையடுத்து வேலூர் ஆவின் கூட்டுறவு அலுவலகத்துக்கு குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆவின் நிறுவனத்துக்கு தற்போதுள்ள இடம் போதுமானதாக இல்லை. மற்றொரு இடம் தேவைப்படுகிறது. ஆவின் நஷ்டத்தை சமாளிக்க ஒருசில நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என அதன் பொது மேலாளர் பெரியசாமி, மதிப்பீட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான அறிக்கை ஒன்றும் குழுவிடம் அளிக்கப்பட்டது.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகராட்சி சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் காய்கனி கழிவுகள் மூலம் 250 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு சில தெரு மின் விளக்குகள் எரிய பயன் படுத்தப்படுகிறது.
இதனை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பழமையான கட்டடத்தையும், பள்ளியில் மாணவிகளுக்கு சமைக்கப்பட்டிருந்த மதிய உணவையும் ஆய்வு செய்தனர்.
மேலும் பொதுப் பணித் துறை கால்வாய், புதியதாக அமைக்கப்பட உள்ள 70 அடி சாலைக்கான இடத்தையும் பார்வையிட்டனர்
அவர்களுடன் ஆற்காடு எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனீவாசன், மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் குபேந்திரன், நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பட்டுரோஜா, ஆணையாளர் கார்த்திகேயன், ஒன்றியக் குழுத் தலைவர் எம்.குட்டி,வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.