அரக்கோணம், செப். 23: இச்சிபுத்தூர் ரயில் நிலையம் மூடப்படும் உத்தரவை எதிர்த்து ஆறு ஊராட்சிகளின் தலைவர்கள் திங்கள்கிழமை துவக்கிய உண்ணாவிரதப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறியுள்ளது.
உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் வீட்டுக்கு போக மறுத்து பந்தலிலேயே தங்கியுள்ளனர். மேலும் புதன்கிழமை மதியத்துக்குள் ரயில் நிலையத்தை மூடும் உத்தரவை வாபஸ் பெறவில்லையெனில், இப்போராட்டம் ரயில் மறியல் போராட்டமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் நிலையத்தை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் இந்நிலையத்தை மூட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதை எதிர்த்து இந்த ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள தணிகை போளூர், இச்சிபுத்தூர், வளர்புரம், உள்ளியம்பாக்கம், கீழாந்தூர், கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் கிராமங்களின் பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
அடையாள உண்ணாவிரதப் போராட்டமாக துவக்கப்பட்ட இப்போராட்டம், இதில் பங்கேற்ற பொது மக்களின் மிகப்பெரிய ஆதரவை அடுத்து காலவரையற்ற போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலையில் போராட்ட நேரம் முடிவடைந்த நிலையில் திடீரென இப்போராட்டத்தை தணிகைபோளூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரளா பிரவீன்குமார், இச்சிபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணபூஷனம்பால்ராஜ் ஆகியோர் காலவரையற்ற போராட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆதரவளிக்க துவங்கினர். அரக்கோணம் ஒன்றிய அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் இதில் முதல்நாளே பங்கேற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலர் கெüதமன், மாவட்ட நிர்வாகி ச.சி.சந்தர், பகுஜன்சமாஜ் கட்சி நகரச் செயலர் பாண்டியன், தலித் மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஜி.மோகன், இ.மணியரசு, எம்.ஜெயராஜ், எம்.வீரராகவன், எஸ்.செஞ்சி ஆகியோரும் உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்று ஆதரவளித்து பேசினர்.
மேலும் அரக்கோணம் ரயில் பயணிகள் பெடரேஷனின் பொதுச்செயலர் நைனாமாசிலாமணி மற்றும் அதன் நிர்வாகிகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர். தொடர்ந்து இச்சிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஜெயா அரக்கோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தணிகைபோளூர் சரளா பிரவீன்குமார், இச்சிபுத்தூர் குணபூஷனம் பால்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், புதன்கிழமை மதியத்துக்குள் மூடும் உத்தரவை வாபஸ் பெறவில்லையெனில் புதன்கிழமை சுற்றுவட்டார ஆறு கிராம பொது மக்கள், கல்லூரிகளின் மாணவ மாணவிகள், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரம்கணக்கானோர் தணிகைபோளூர் ரயில்வே கேட் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தணிகைபோளூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.