வேலூர், செப். 23: மாதம்தோறும் ரூ.1000 மருத்துவப்படி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலர் எஸ்.ஜெயச்சந்திர பாக்கியராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் டி.குப்பம், மாவட்ட துணைத் தலைவர் டி.ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சைத் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், ஊராட்சி உதவியாளர்கள், வனக்காவலர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்து 50 வழங்க வேண்டும். 20 ஆண்டு பணிமுடித்த அனைவருக்கும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவர் பி.எல்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் என்.மார்கண்டன், பி.என்.பாண்டுரங்கன், என்.ராமகிருஷ்ணன், சி.சொக்கலிங்கம், கே.தேவராஜ், எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.