வேலூர் நகரில் அண்ணா சாலையில் பாதாள சாக்கடைப் பணி நடைபெறுவதையொட்டி, அதற்கு இணையாக பேருந்து நிலையத்தின் பின்புறம் செல்லும் கிருபானந்த
வாரியார் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றி வாகனங்களை இயக்கவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
பொது மக்களுக்கு போக்குவரத்து மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில் அண்ணா சாலைக்கு இணையாக கிழக்குபக்கம் செல்லும் கிருபானந்தவாரியார் சாலையை (லாங்கு பஜார்) ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர், வணிகர் சங்கத்தினர், தள்ளு வண்டி, சுமை தூக்குவோர் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 25 ஆம் தேதி முதல் கிருபானந்தவாரியார் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
இதன்படி, தள்ளுவண்டிகள், இருசக்கர வாகனங்கள், பழக்கடைகளுக்கு என தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கோடுகள் அச்சாலையில் போடப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அவை நிறுத்தப்பட வேண்டும். கடை உரிமையாளர்களின் வாகனங்கள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.
பாதசாரிகளுக்கு பாóதை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாதையை மறைத்துள்ள ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் அகற்ற வேண்டும். இல்லாவிடில் மாநகராட்சி, காவல் துறை நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றும்.
சரக்கு லாரிகள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே இச்சாலையில் சரக்குகள் இறக்க அனுமதிக்கப்படும். பிற நேரங்களில் வரும் லாரிகள் நேஷனல் திரையரங்கு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும்.
விதிகளை மீறுவோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.