வாணியம்பாடி, செப். 23: நாட்டின் வளர்ச்சி தரமான கல்வியைச் சார்ந்துள்ளது என வேலூர் மண்டல கல்லூரிகளின் இணை இயக்குநர் எம்.ஏ.ஜெயராஜ் கூறினார்.
வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியின் 66வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் அல்மாஇக்பால் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரிச் செயலர் எல்.எம்.மூனீர் அகமது தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பிரேம்நசீர் வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மண்டல கல்லூரிகளின் இணை இயக்குநர் முனைவர் எம்.ஏ.ஜெயராஜ், 450 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசுகையில், மாணவர்களான உங்களை உருவாக்குவதும், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி ஒன்று தான். ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் தரமான கல்வியை சார்ந்துள்ளது என்றார்.
விழாவில் துணை முதல்வர் முகமது இலியாஸ், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.