ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பளவுக்கு விதி 110-ன் கீழ் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை யை வெளியிட வேண்டுமென ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் கூட்டத்தில் அவர் பேசியது: ராணிப்பேட்டையில் நடந்த வேலூர் மாவட்ட திமுகவின் பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். கட்சியில் தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
கட்சியினர் வழங்கிய ஆலோசனைகளை ஏற்று உங்களில் ஒருவனாக நான் தொடர்ந்து இருப்பேன். இதுவரை 14 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் முழுமையாக முடிந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகும், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகும் பொறுப்புகளுக்கு வர கட்சியினரிடையே போட்டி நடப்பது திமுகவில் மட்டும்தான்.
பல வழக்குகள் போடப்பட்டாலும் திமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கம்பீரமாக எழுந்து நிற்பது தான் திமுக. விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகள், உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. அவற்றின் நிலை என்ன என்று தெரியவில்லை.
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாகும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி திமுக, மக்களை பற்றி சிந்திக்கும் தலைவர் கருணாநிதி மட்டும்தான். கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை. இலவசங்களும், மக்களை முழுமையாகச் சென்று சேரவில்லை. ஆகவே வருகின்ற 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர உறுதி எடுப்போம் என அவர் கூறினார்.
திமுகவின் துணைப் பொதுச் செயலர் துரைமுருகன், மாவட்டச் செயலர் ஆர். காந்தி, மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்திகேயன், ஆம்பூர் நகர செயலர் எம்.ஆர். ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டம்
முன்னதாக வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இதில் பல்வேறு அணிகள், தரப்புகளைச் சேர்ந்த 180 பேரை தனித் தனியே அழைத்து கட்சியின் வளர்ச்சிப் பணி குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.பி.இ. சதீஷ்குமார், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.