Enable Javscript for better performance
வணிக நோக்கில் உபயோகித்த 118 சிலிண்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் நகரில் வணிக நோக்கில் பயன்படுத்திய 98 வீட்டு உபயோக சிலிண்டர்களையும், முறைகேடாக மாற்று சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்ப பயன்படுத்திய 20 வணிக உபயோக சிலிண்டர்களையும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் துணை மேலாளர் கே.பிரேமா புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு கைப்பற்றினார்.

     நகரில் சிஎம்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநில நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பயன்படுத்துவதற்காக வேலூர் நகரில் ஒரு கிலோ, 2 கிலோ எடையுள்ள அடுப்புடன் கூடிய சிலிண்டர்கள் ஏராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் முறையற்ற வகையில் வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து எரிவாயு நிரப்பும் தொழிலையும் அப்பகுதியில் வெளிப்படையாக சிலர் நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் காவல்துறை அதிகாரிகளும் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிர்வாகத்துக்கு இது தொடர்பான புகார்கள் சென்ற நிலையில், அதன் துணை மேலாளர் கே.பிரேமா வேலூர் புதிய பஸ் நிலையம், காந்தி சாலை, சிஎம்சியை சுற்றியுள்ள தனியார் விடுதிகள், டீக்கடைகள், புதிய பஸ் நிலையம், காட்பாடி ரோடு, விருதம்பட்டு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மாலை வரை புதன்கிழமை திடீர் ஆய்வை நடத்தினார்.

     இதில் 118 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து சிறிய அளவிலான உரிய அங்கீகாரம் இல்லாத சிலிண்டர்களில் நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டன.

     இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, நகரில் ஒருசிலர் வீட்டு உபயோக சிலிண்டர்களை லாபநோக்குடன் வணிகத்துக்கு பயன்படுத்துகின்றனர். இத்தகையோரின் வாடிக்கையாளர் எண் கண்டறியப்பட்டு அவற்றுக்கு இனி வருங்காலங்களில் சிலிண்டர்கள் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்றார்.

    மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு

     நகரில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பல வணிக நோக்கில் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. அத்துடன் பாதுகாப்பற்ற அடுப்புடன் கூடிய சிலிண்டர்களை தனியார் விடுதிகளில் தங்கியிருப்போர் பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதில் ஏதேனும் பெரிய விபத்து ஏற்படும் சூழலில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ளும் நிலையில் அவர்களின் செயல்பாடு காணப்படுகிறது. பெரும் விபத்து ஏற்பட்டு அதனால் பல உயிரிழப்புகளை சந்திக்கும் முன்பு இத்தகைய அடுப்புகளை நகரில் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai