Enable Javscript for better performance
10-ம் வகுப்புத் தேர்வு தொடக்கம்: 61,654 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 61 ஆயிரத்து 654 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    வேலூர் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் ஆட்சியர் இரா.நந்தகோபால் தேர்வு எழுதும் மாணவர்களை பார்வையிட்டார்.

     வேலூர் கல்வி மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் 14 ஆயிரத்து 576 மாணவர்களும், 16 ஆயிரத்து 657 மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 95 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 7 மாணவர்களும், 15 ஆயிரத்து 414 மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை கண்காணிக்க 330 பேர் கொண்ட பறக்கும் படையினரும், 3,030 கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

     தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்காக வேலூர் ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, தொரப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

     புதன்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வின்போது அரக்கோணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காப்பியடித்த மாணவர் ஒருவர் பிடிபட்டார். அவரது விடைத் தாள் மட்டும் தனித்து தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு தனி கவரில் வைத்து அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

    தமிழ் வினாத்தாள் எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி

        முதல் தேர்வான தமிழ் முதல் தாளின் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.

     தேர்வு நேர மாற்றம்:  பத்தாம் வகுப்புத் தேர்வு 45 நிமிஷங்களுக்கு முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கியது.   தேர்வு நேர மாற்றம், பெரும்பாலான மாணவர்களை பாதிக்கவில்லை என்றாலும், கிராமப்புறங்களில் சில மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

     திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில கிராமப்புற மாணவர்கள் 15 நிமிஷங்கள் முதல் 30 நிமிஷங்கள் வரை தேர்வு மையங்களுக்குத் தாமதமாக வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  ஆனால், நகர்ப்புறங்களில் இந்த நேர மாற்றத்தை மாணவர்கள் வரவேற்றனர். காலையில் வெயிலுக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

      மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக 5 மாணவர்கள் மட்டுமே  பிடிபட்டனர்.

     பத்தாம் வகுப்புத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 3,179 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 286 தேர்வு மையங்களில் 74 ஆயிரம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai