Enable Javscript for better performance
ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் ஒரே நாளில் நெடுஞ்சாலைத் துறையும், நகராட்சி நிர்வாகமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டன.

    ஆம்பூரில் நேதாஜி சாலை, உமர்சாலை, பஜார், எஸ்.கே.சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்பேரில் ஆம்பூர் நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கியது. உமர் சாலைப் பகுதியில் நகராட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதேபோல மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி சாலை, பிராட் பஜார் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆம்பூர் நகரக் காவல் நிலையம், கிளைச் சிறை, நீதிமன்ற வளாகம் அருகே சாலையோரம் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகளை வியாபாரிகளே அங்கிருந்து அகற்றினர். மேலும் கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    ஆம்பூரில் ஒரே நாளில் நகராட்சி நிர்வாமும், நெடுஞ்சாலை துறையும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கண்துடைப்புக்காக...

    ஆம்பூர் நேதாஜி சாலை முதல் பாலாற்றுத் தரைப்பாலம் வரை உள்ள சாலையானது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்பு இந்தச் சாலையின் வழியாகத்தான் குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தற்போது ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. அதேபோல நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகள் அகற்றிய ஓரிரு நாள்களுக்குள் மறுபடியும் ஆக்கிரமிப்புகள் செய்துவிடுகின்றனர்.

    கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுகிறது எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai