Enable Javscript for better performance
காதல் தம்பதிக்கு விதித்த அபராதம், தண்டனையை ரத்து செய்த ஊர் பஞ்சாயத்தார்- Dinamani

சுடச்சுட

    

    காதல் தம்பதிக்கு விதித்த அபராதம், தண்டனையை ரத்து செய்த ஊர் பஞ்சாயத்தார்

    By ஆம்பூர்,  |   Published on : 17th April 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டாட்சியர், போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், காதல் தம்பதிக்கு விதித்த அபராதம், தண்டனையை விலக்கிக் கொள்வதாக ஊர் பஞ்சாயத்தார் வியாழக்கிழமை எழுதிக் கொடுத்தனர்.

    ஆம்பூரை அடுத்த சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் கோவிந்தராஜும், அதே ஊரை சேர்ந்த பார்வதியம்மாள் மகள் அனுஷாவும் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதி திருமலையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அனுஷாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் திருமணத்துக்கு பிறகு ஊர் திரும்பிய காதல் தம்பதியினருக்கு ஊர் பஞ்சாயத்தார் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரமும், மகன் காதல் திருமணம் குறித்து ஊர் பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவிக்காததால் கோவிந்தராஜின் தந்தை ஜெயராமனுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதித்தனர். அவ்வளவு தொகையை அபராதமாக செலுத்த இயலாது என கூறியதால் அவர்களை பஞ்சாயத்தார் ஊரை விட்டு விலக்கி வைத்தனர். இந்நிலையில் தங்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்ளுமாறு கோவிந்தராஜ் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் தங்கள் வீட்டு முன் தரையில் அமர்ந்து புதன்கிழமை தர்னா நடத்தினர். வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்புவதற்காக அங்கு விசாரணை நடத்த ஆம்பூர் டிஎஸ்பி கணேசன், வட்டாட்சியர் பி. ரத்னா, வருவாய்த் துறையினர், உமர்ஆபாத் போலீஸார் வியாழக்கிழமை சென்றனர். அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் பஞ்சாயத்தார் விசாரணைக்கு வரவில்லை. அதனால் போலீஸார், வருவாய் துறையினர் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாயத்தாருக்கு ஆதரவாகவும், விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வூர் மக்களில் சிலர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பிறகு முக்கியப் பிரமுகர்கள் சென்று பஞ்சாயத்தாரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவ்வூரில் ஒரு துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு வரவேண்டியிருந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாக பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர்.

    அதன்பிறகு இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸார், வருவாய்த் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் பஞ்சாயத்தார் சார்பில் காதல் தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட அபராதம், தண்டனையை ரத்து செய்வதாகக் கூறி அதனை எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

    மேலும் ஊரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தை அணுகி தீர்வு காண வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அறிவுறுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai