Enable Javscript for better performance
திட்டமிட்டபடுகொலை- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் போலீஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கொல்லப்படவில்லை. அவர்களை போலீஸார் கடத்திச் சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு தெரிவித்தது.

    திருப்பதி வனப் பகுதியில் தமிழக மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

    இந்தக் குழுவில் இடம் பெற்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை டிஜிபி ராம்மோகன், பியூப்பில்ஸ் வாட் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிஃபென், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அஜிதா, ஓய்வு பெற்ற இந்தியத் தூதர் சத்யா பிரதாப்பால், ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, தடய அறிவியல் நிபுணர் சேவியர் சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பதி வனப் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தைப் பார்க்கச் சென்றனர்.

    ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு ஆந்திர மாநில அரசு அனுமதி மறுத்தது. இது தொடர்பாக இந்தக் குழுவினர் டிஐஜி காந்தாராவை சந்தித்தபோது எதையும் பேச இயலாது என அவர் மறுத்தார்.

    இதையடுத்து இந்தக் குழுவினர் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரை தருமபுரி மாவட்டத்திலும், 12 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை திருவண்ணாமலை மாவட்டத்திலும் சந்தித்து விசாரணை நடத்தினர்.

    அத்துடன் ஆந்திர மாநில போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி வந்த பாலச்சந்தர், இளங்கோ, சேகர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து வேலூரில் நிருபர்களை இந்தக் குழுவினர் புதன்கிழமை இரவு சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது:

    ஆந்திர மாநில அரசின் காவல் துறையினர் 20 தமிழர்களை திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர்.

    அன்னிய பயங்கரவாத அமைப்புகளைப் போன்று ஆந்திர மாநில போலீஸார் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

    தவறை மறைக்க இப்போது ஆந்திர அரசு, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வீரப்பனின் கூட்டாளிகள் என்ற ரீதியில் தகவல் தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான பொய்.

    நீதிமன்ற உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் அந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக சடலங்களை எரியூட்ட வற்புறுத்தி நிறைவேற்றியுள்ளது. இதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டிய கடமை உள்ளது.

    பாதுகாக்கப்பட்டு வரும் சடலங்களை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடும் நிலையில், உண்மை கண்டறியும் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்வையாளராக அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆந்திர உயர்நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் ஒருவர் மீது மட்டும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

    இந்தச் சம்பவத்தின்போது ஆந்திர போலீஸாரிடம் இருந்து தப்பிய பாலசந்தர், இளங்கோ, சேகரன் ஆகியோர், தங்களுடன் வந்தவர்களில் 11 பேரை வலுக்கட்டாயமாக ஆந்திர போலீஸார் கடத்திச் சென்று கொன்றதாகச் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்கள் மூவரும் முக்கியமான சாட்சிகள். இவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளித்துள்ளது பாராட்டுக்குரியது.

    அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், முன்னாள் ஊராட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரின் செல்லிடப்பேசி உரையாடல்களையும் தமிழக அரசு உடனடியாக தொடர்புடைய செல்போன் நிறுவனங்களிடம் இருந்துப் பெற வேண்டும்.

    ஆந்திர மாநில அரசிடம் சில கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் பெற வேண்டியுள்ளது.

    ஒரு வேளை அவர்கள் பதில் அளிக்க விரும்பாவிட்டாலும், வரும் 23-ஆம் தேதி குடியரசுத் தலைவர், தமிழக, ஆந்திர அரசுகளுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர் குழுவினர்.

    பற்களை உடைத்து... கண்களைத் தோண்டி....

    ஆந்திர போலீஸாரால் கடத்திக் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் சடலங்களை வெயிலில் கிடத்தி தடயங்களை அழிக்க முயற்சித்துள்ளனர். செம்மரம் வெட்ட வந்த 200 பேர் காட்டில் பதுங்கியிருந்தவர்கள் என்று ஆந்திர போலீஸார் கூறியதில் உண்மை இல்லை.

    உயிரிழந்தவர்களின் சடலங்களில் கை விரல்கள், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒருவரது கால் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. பற்கள் உடைக்கப்பட்டுள்ளன. கண்கள் தோண்டப்பட்டுள்ளன என்பது எங்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த அனைவரும் ஏழைகள். செம்மரங்களை வெட்ட இவர்களை யார் அழைத்துச் சென்றார்கள் என்ற விவரம் இல்லை என உண்மை கண்டறியும் குழுவினர் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai