Enable Javscript for better performance
\\\"மார்ச்சுக்குள் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மார்ச்சுக்குள் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம்'

    By ஆம்பூர்,  |   Published on : 27th January 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் மார்ச் மாதத்துக்குள் குடிநீர்ப் பிரச்னை தீரும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்தார்.

    குடியரசு தினத்தையொட்டி மாதனூர் ஊராட்சி ஒன்றியம், அகரம்சேரி ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அவர் பேசியது:

    ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம், மக்களின் கையில் அதிகாரம் ஆகியவற்றுக்காக கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    அனைத்துக் கிராமங்களிலும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அகரம்சேரி ஊராட்சியில் 2014- 2015ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 1.25 கோடி செலவில் திட்டப் பணிகள் நடந்துள்ளன.

    இந்தக் கிராமத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தத்தெடுத்துள்ளார். அதன்மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இந்த ஊராட்சியை முன்மாதிரிக் கிராமமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் பன்னீர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் மஞ்சுளா ஊராட்சி துணைத் தலைவர் பிரபு, மாவட்ட திட்ட அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியம் ரெஜினா, அன்பழன், வட்டாட்சியர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆற்காட்டில்...

    ஆற்காடு ஒன்றியம், வேப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் ஆர்.காஞ்சனாமாலா தலைமை வகித்தார்.

    வாலாஜா வட்டாட்சியர் பி.மணிலா முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மு.பிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசியதாவது:

    வேப்பூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினால் தான் பொது மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியும். ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். பாலாற்றில் மணல் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அரக்கோணத்தில்...

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் அம்மனூரில் கிராம சபைக் கூட்டம் அந்த ஊராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் தேவவெங்கடரத்தினம் தலைமை தாங்கினார். இதில் எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று பேசுகையில், இக்கிராம மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். முதலில் இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சமுதாயக் கூடம் விரைவில் கட்டித்தரப்படும். குடிநீர் தேவையை கணக்கில் கொண்டு இங்கு புதியதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித் தரப்படும் என்றார்.

    அம்பரிஷபுரத்தில்...

    அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் விஜி, ஊராட்சி செயலர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai