Enable Javscript for better performance
மூதாட்டியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் மீது வழக்கு; வேலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மூதாட்டியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் மீது வழக்கு; வேலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

    By வேலூர்  |   Published on : 28th January 2015 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலஅபகரிப்பு வழக்கில் மூதாட்டியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி, 6 போலீஸார் மீது  வேலூர் சிபிசிஐடி போலீஸார் அண்மையில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(75). இவர், தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு 2007ஆம் ஆண்டு தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

    ஆனால், அந்த நிலத்தை கிருஷ்ணவேணியின் அண்ணன் 10 ஆண்டுகளுக்கு முன்பே மோசடி செய்து தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்துள்ளாராம். அந்த நிலத்தை அவர் தனது மகன்கள் பெயருக்கு மாற்றி, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கு விற்றுள்ளாராம்.

    அந்த நிலத்தை வாங்கியவர்கள், கிருஷ்ணவேணி மீது காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்த நிலையில், விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி மணவாளன் உள்ளிட்ட 6 போலீஸார், கிருஷ்ணவேணியை துப்பாக்கிக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    அத்துடன், கிருஷ்ணவேணியை போலீஸார் மிரட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தனது மகன்களுக்கு பதிவு செய்து கொடுத்த தானப் பத்திரத்தை ரத்து செய்ய வைத்தார்களாம்.

    இச்சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளன. போலீஸார் தன்னை மிரட்டி தானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டதாக, முதல்வரின் தனிப் பிரிவுக்கு கிருஷ்ணவேணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையிலும் உண்மை வெளிவரவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணவேணி வழக்கு தொடர்ந்தார்.

    இந்தப் புகார் மனு மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து அப்போதைய வேலூர் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளையன் விசாரணை நடத்தினார். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலக கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரிக்கப்பட்டது.

    கிருஷ்ணவேணி அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வேலூர் சிபிசிஐடி போலீஸார் தற்போது வழக்குப் பதிந்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வேலூரில் விசாரணை நடத்தப்படுகிறது.

    விசாரணையைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் போலீஸார் இரு தினங்களுக்குள் கைது செய்யப்படலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai